எழுந்தருளின

 " எழுந்தருளின "







இறந்துபோன ஒரு ஞானி, தபஸி, சிவதீட்சிதை பெற்ற ஒரு அரசன். இவர்களது பூத உடலை எவ்வாறு பள்ளிப்படுத்தவேண்டும்.?
எங்கே கிடத்தவேண்டும்.?
எவ்வாறு நீராட்ட வேண்டும்.? என்னென்ன சம்பிரதாயங்கள் செய்யவேண்டும்.? எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும்.? எவ்வாறு சமாதி லிங்கம் எடுக்கவேண்டும்.? பல்வேறு சைவ நூல்களில் கூறப்பட்ட விபரங்கள் மேற்கோளுடன் ஒருவர் சுலோகங்களாக சுவடிகளில் எழுதியுள்ளார்.
இந்த ஓலைச்சுவடிகள் சரசுவதிமகால் நூலகச் சேகரிப்பில் உள்ளன. இந்த விபரங்களை " சமாதி லிங்க பிரதிட்டை,  என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளனர்.

இந்நூலில்..
இறப்பது முதல் நல்லடக்கம் செய்வது வரை அனைத்து சம்பிரதாயங்களும் கூறப்பட்டுள்ளன.

இறந்த ஒருவரின் பூத உடலை குளிப்பாட்டும் முறை குறித்து சுலோகம் 31
இவ்வாறு கூறும்.

பூத உடலை ஒரு பீடத்தில் கிடத்தப்படுவதை "எழுந்தருளின " என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

32. நீராட்டல்
---------------------------

"சிவமயமா ஞானி முன்னோர் சிறையெனவே விடுத்த திருமேனி தனைப்பீடத் தெழுந்தருளப் பண்ணிப் பவமகலு மெண்ணெய்மா நெல்லிமஞ்சட் காப்புப் பஞ்சகவ்வியம் பஞ்சா மிருதநெய்பாற் றதிதேன் சுவைதருதீங் கரும்புகனி பாகாமிருத மிளநீர் தூயநீர்கு (சைமன்)னிபூச் சொன்னோத காதி
நவகலசந் தாபித்து நற்சங்கப் புனலு நன் முடிமே லஞ்செழுத்தா னவையறநின்றாட்டே. "

உரை: 
சிவமயமாகிய ஞானி, முன் தாம் இருந்த, ஒரு சிறை என்று விட்டுச்சென்ற நல் உடலை, ஒரு உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச்செய்து, பாவத்தைப் போக்குகின்ற எண்ணெய்க் காப்புச் செய்து, மா, நெல்லி, மஞ்சள் இவைகளின் தூள்கலந்த திரவியத்தூள் காப்புச்செய்து,பால், தயிர், நெய், கோமயம், ஆப்பி, (சாணம்) ஆகிய ஐந்தும் கலந்த பஞ்சாமிருதம் ஆட்டி, தனியாக நெய்க்காப்பு, பாலபிடேகம், தேனபிடேகம், கருப்பஞ்சாறுஆட்டி,.  கனிவகைகளின் சாற்றினில் சர்க்கரை 
கலந்து ஆட்டி, இளநீர் ஆட்டிப் பின்னர், தூயநீரினாலாட்டி, அதன்பின்னர் தருப்பையினைப் பரப்பி,
அதில் ஒன்பது குடங்களில் மலர், தங்கம், மழைநீர் முதலானவைகளை நிரப்பிவைத்து பின்னர் எடுத்து அந்நீராலும் சங்குகளில் நிரப்பிவைத்த தண்ணீராலும் ஐந்தெழுத்தினை ஓதிக்கொண்டே குற்றமற நின்றுகொண்டே நீராட்ட வேண்டும்.

------------------------------------------------

இப்போ ஒரு கல்வெட்டுச் செய்தி. இக்கல்வெட்டிலும் 
" எழுந்தருளின " என்னும் ஒரு சொல் வருகிறது.l

உடையாளூர் 
பால்குளத்து அம்மன் கோவில் தூணில் உள்ள  கல்வெட்டுப் பாடம்....

1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்.........

செய்தியின் பொருள்...

முதலாம் குலோத்துங்கனின் 42 ஆம் ஆட்சியாண்டு
கல்வெட்டு 
அதாவது கி.பி 1112 ஆம் ஆண்டு..

அதாவது இராஜராஜர் இறந்த 98 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட கல்வெட்டு..

சிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் அமைக்கப்பட்ட
ஒரு திருமாளிகை முன்பு  உள்ள ஒரு மண்டபத்தில்..
எழுந்தருளினார் ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரத்தேவர்..
( எதற்காக என்ற தகவல் இல்லை.. )

மேற்கண்ட மண்டபம் பழுதடைந்தது..
இம்மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்தனர்..

இவ்வூரைச் சேர்ந்த நாடறிபுகழான் என்பவர்
இப்பணியை செய்கிறார்.. இவருக்குத்துணையாக
இவ்வூர் பிடாரர்கள் இராஜேந்திரசோழ நாயகனான
ஈசான சிவரும், அறங்காட்டி பிச்சரும் இருந்தனர்.
இவர்கள் இப்பணியை விரதம் இருந்து மேற்கொண்டனர்..

இதுதான் கல்வெட்டின் செய்திகள்....

அதாவது இராஜராஜர் எழுந்தருளிய ஓர் இடம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பித்த்தவர்கள் விரதம் இருந்து இவ்வேளையைச் செய்தனர். அந்தளவுக்கு புனிததன்மை வாய்ந்த ஓர் இடம்.

உடையாளூர் மாஹேஸ்வர ஸ்தானம் என்று கல்வெட்டில் அழைக்கப்படுகிறது.. மாஹேஸ்வர பெரும் தரிசனத்தார் என்பவர்கள் பாசுபத சைவப் பிரிவைச் சேர்ந்த மகாவிரதிகள். இவர்கள்தான் சமாதி லிங்க கோவிலை வழிபாடு செய்யும் உரிமை பெற்றவர்களாம்.

பாற்குளம் பகுதியை கல்வெட்டுகள் 
" அபிமுக்தம் " என்றழைக்கின்றன. இதன் பொருள் என்ன.?

தீட்சை பெற்ற பூத உடலை குளக்கரை, ஏரிக்கரை, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளின் அருகிலோ, சோலைகளின் நடுவிலோ, சிவாலய வளாகத்திலோ அடக்கம் செய்து சமாதி லிங்கம் எடுக்கவேண்டும் என்று சாத்திர நூல்கள் கூறுகிறது.

பள்ளிப்படை என்ற சொல் உள்ள கல்வெட்டு இல்லைதான்.

ஆனால்..
உடையாளூரில் ஒரு கோவில் ஒன்று முற்றிலும் அழிந்துள்ளது.  கோவிலின் வாயிற்படி முதற்கொண்டு தூண்கள் வரை .. 
ஏராளமான சிற்பங்களும் இவ்வூர் முழுவதும் சிதறிக் கிடக்கிறது. இன்றும் நாம் காணலாம்.

குளக்கரையில் இருக்கும் சண்டிகேசர் முதல் கைலாசநாதர் ஆலய வளாகத்தில் இருக்கும் லிங்கத்தை ஒருவர் வணங்கும் சிற்பம் வரை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இச்சிற்பத்தை சிவபாதசேகர அனுக்கிரகமூர்த்தி என்றே அழைக்கிறார்கள்.

சிதைந்த அக்கோவிலின் கற்பாகங்கள் இவ்வூரின் ஏராளமான கட்டிட வேலைகளுக்கும், வாயிற்படியாகவும் துணி துவைக்கும் கல்லாகவும் இருக்கின்றன. அதில் ஒரு தூண்தான் பாற்குளத்தம்மன் கோவில் கட்டிட வேலைக்கும் பயன்பட்டுள்ளது.

"பள்ளிப்படை " என்று பெயர் உள்ள அந்த கற் சாசனம் எங்கு புதைந்துள்ளதோ.? யார்வீட்டு வாயிற்படியில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதோ.?

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு