வீரராஜேந்த்ரனின் கல்வெட்டு

 காஞ்சி காமகோடி பீடம் – சாஸனச் சான்றுகள்


காஞ்சி காமகோடி பீடமானது காஞ்சியில் ஆம்னாய பீடமாகத் திகழ்வது. 1816-இல் கர்னல் மெக்கன்ஸி அவர்கள் பல்வேறு சாஸனங்களைக் குறித்து வைத்த போது, தன்னுடைய உதவியாளரான பாபுராவைக் காஞ்சி காமகோடி பீடத்திற்கு அனுப்பினார். அவர் 1817-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி மடத்தைப் பார்த்து சாஸனங்களைக் கேட்க, சோழ பாண்டியர்தம் சாஸனங்களைக் கண்டதாகவும் இரண்டு சாஸனங்களுடைய ப்ரதியைத் தாம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் 1916-இல் மஹாஸ்வாமிகளின் ஆணைப்படி ஆகச் சிறந்த தொல்லியலாளரான டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் சாஸனங்களைத் தேடியபோது தெலுங்க சோழன் விஜயகண்டகோபாலன் காலம் தொடங்கி ஒன்பதரைச் செப்பேடுகள் மட்டுமே கிடைக்கக் கண்டார்.மற்றையவை அழிந்துபட்ட நிலையை கோபிநாதராவ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். அரைச் செப்பேடு பிறகு மஹாஸ்வாமிகள் நீராடும் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது. பத்துச் செப்பேடுகள் ஸ்ரீமடத்திலுள்ளனஇவையும் சில கல்வெட்டுக்களும் மடத்தின் தொன்மையை அங்கை நெல்லிக்கனியாய் விளக்குகின்றன.
1. விஜயகண்டகோபாலதேவனின் அம்பிகாபுரச் செப்பேடு – பொயு 1231
தெலுங்க சோழன் விஜயகண்டகோபாலதேவனால் வெளியிடப்பெற்றது. கீழம்பி என்னும் சிற்றூரை விஜயகண்ட கோபாலதேவன் தனது பதினாறாம் ஆட்சியாண்டில் சங்கராசார்யாருக்கு வழங்கியதற்கு ஆவணமாக இந்தச் செப்பெடு வழங்கப்பெற்றது. இதன் காலம் பொயு 1231 ஆகும்.  
2. குமாரக் கம்பண்ணனின் காஞ்சி மடக் கல்வெட்டு – பொயு 14-ஆம் நூற்றாண்டு
குமாரகம்பண்ணன் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிக்காற்பகுதியில் தமிழகத்தை மாற்றார் பிடியிலிருந்து மீட்டவன். இவனுடைய கல்வெட்டு ஸ்ரீமடத்தின் சுவர்ப்பகுதியில் துண்டுகளாக அமைந்திருக்கிறது. இது மடப்புறம் என்னும் சொல்லாட்சியையும் கொண்டிருக்கிறது. மடப்புறம் என்பது மடங்களுக்கு வழங்கப்பெறும் நிலக்கொடை
3. வீரநரஸிம்ஹனின் எழுச்சூர் செப்பேடு – பொயு 1507
விஜயநகரவேந்தன் வீரநரஸிம்ஹனின் செப்பேடு அவன் துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து வழங்கியது. வெண்ணீறணிந்த திருமேனியும் சிவக்கண்மணி பொலியும் அருளுருவும் கொண்ட ஸதாசிவஸரஸ்வதி என்னும் சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு எழிச்சூர் வெண்பாக்கம் ஆகிய சிற்றூர்களை சகவருடம் 1429 அதாவது பொயு 1507-இல் வழங்கப்பெற்றது.
4. வீரநரஸிம்ஹனின் குடியாந்தண்டலம் செப்பேடு – பொயு 1507
அதே வேந்தன் 1507-இல் குடியாந்தண்டலம் என்னும் ஊரை ஸதாசிவஸரஸ்வதி ஸ்வாமிகளுக்குத் தானமாக வழங்கியமைக்கான மானியம். 
5. க்ருஷ்ணதேவராயரின் கீழம்பி கல்வெட்டு – பொயு 1514
இந்தக் கல்வெட்டு க்ருஷ்ணதேவராயரின் காலத்தில் சந்த்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம் மடப்புறமாகிய அம்பிகாபுரத்தை அதாவது கீழம்பியை அம்பிகாவனமுடைய நாயனாரான பெருமானின் கோயிலுக்குத் தானமாக வழங்கியமைக்கு ஆவணமாக அந்தக் கோயிலின் சுவரில் அமைந்துள்ளது.
6. க்ருஷ்ணதேவராயரின் பொடவூர் செப்பேடு – பொயு 1522
இந்தச் செப்பேடு ஸ்ரீக்ருஷ்ணதேவராயரால் கோ-த்வாதசியில் காஞ்சிபுரத்தில் திகழ்பவரும் நமஹாதேவஸரஸ்வதியின் சிஷ்யுமான சந்த்ரசூடஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பொடவூர் மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய ஊர்களை இணைத்து க்ருஷ்ணதேவராயபுரம் என்னும் பெயரோடு வழங்கியமைக்கான ஆவணம்.
7. க்ருஷ்ணதேவராயரின் உதையம்பாக்கம் செப்பேடு – பொயு 1528
இந்தச் செப்பேடு முன்பு கூறிய சந்த்ரசேகரஸரஸ்வதியின் சிஷ்யரும் சிவவடிவமாகத் திகழ்பவருமான ஸதாசிவஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உதையம்பாக்கம் என்னும் ஊரை க்ருஷ்ணதேவராயர் துங்கபத்ரை நதிக்கரையிலிருந்து வழங்கியமைக்கு ஆவணமாக அமைந்துள்ளது. 
8. ஸதாசிவராயரின் வரதராஜர் கோயில் கல்வெட்டு– பொயு 1562
இந்தக் கல்வெட்டு மேல் குறிப்பிட்டி குடியாந்தண்டலத்தை அடுத்துள்ள சுருட்டிலை சங்கராசார்யபுரம் என்று குறிப்பிடுகிறது.
9. முழுவுறாத விஜயநகரச் செப்பேடு 
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் செப்பேடு முடிவுறாமல் அரசன் பெயருமில்லாமல் அமைந்துள்ளது.
10. விஜயரகுநாத தொண்டைமானின் – பொயு 1691
இந்தச் செப்பேடு புதுக்கோட்டை மன்னவனான விஜயரகுநாத தொண்டைமானால் உளக்கட்டிலிருக்கும் வேங்கடக்ருஷ்ணையருக்கு கொடுத்த மான்யத்தை விளக்குகிறது.
11. விஜயரங்க சொக்கநாதரின் ஜம்புகேச்வரம் செப்பேடு – பொயு1708
இந்தச் செப்பேடு காஞ்சியிலிருக்கும் சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு மஹேந்த்ரமங்கலம் முதலிய ஊர்களைத் தானமாக வழங்கியமைக்கு ஆவணமாக அமைந்துள்ளது. 
12. கோல்கொண்ட ஸுல்தானின் மேலுபாக செப்பேடு – பொயு 1686
இந்தச் செப்பேடு கோல்கொண்டா ஸுல்தான் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கு மேல்பாக்கத்தைத் தானமாக வழங்கியமைக்கு ஆவணமாக அமைந்துள்ளது. இதில் ஸ்ரீமடத்தின் பிருதாவளி முழுமையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

13. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதிகளின் மேலுபாக செப்பேடு - 1687
இந்தச் செப்பேடு க்ரஹண காலத்தில் காமகோடி பீடாதிபதிகள் மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ராமசாஸ்த்ரி என்பவருக்குத் தானமாக வழங்கியமைக்கு ஆவணமானது. இதிலும் மடத்தின் பிருதாவளி அமைந்துள்ளது.
14. தம்புசெட்டித் தெரு கல்வெட்டு – பொயு 1742
சென்னை தம்புச்செட்டித் தெருவில்லுள்ள கல்வெட்டொன்று சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு மடம் கட்டிக் கொடுத்தமையை விளக்குகிறது.
இவற்றைத் தவிர பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு மடங்கள், மன்னர்கள், கிழக்கிந்திய கம்பெனி முதலியவற்றோடு கூடிய பல்வேறு கடிதங்களும் மற்றைய ஆவணங்களும் ஸ்ரீமடத்தில் அமைந்துள்ளது.
 இவற்றோடு சோழமாதேவியிலுள்ள

வீரராஜேந்த்ரனின் கல்வெட்டு குறிப்பிடும் பகவத்பாதீயம் சாரீரிக பாஷ்யத்திற்கு சிதானந்த படாரர் செய்த வார்த்திகம் என்ற வரி குறிப்பிடும் சிதானந்த படாரர் காமகோடி பீடாதிபதிகளாக இலங்கிய சித்கனராக இருக்க வாய்ப்பிருப்பதாக என்ற முனைவர் நாகஸ்வாமி முதலிய அறிஞர்கள் தெரிவித்த கருத்தும் நோக்கற்பாலது.
 இன்று இந்தியாவில் உயிர்ப்போடிருக்கும் வைதிக மடங்களில் இப்படி கடந்த எண்ணூறு வருடங்களாக இடையறாத சாஸனச் சான்றுகளைப் பெற்ற மடம் இதுவொன்றே. இப்படி ஆகச்சிறந்த தொல்லியலாளர்கள் ஒப்புக்கொண்ட செப்பேட்டுத் தொன்மையும் இடையறாதத் தன்மையும் கொண்ட காஞ்சி மடத்தைப் போலிமடமென்றும் பிற்கால மடமென்றும் கூறுவதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன்.
1. வரலாற்றின் போக்கை அறியாத்தன்மை
2. காழ்ப்புணர்ச்சி
3. மனப்பிறழ்ச்சி
தமிழகத்து நடுநிலை ஆய்வாளர்களும் வரலாற்று ஆர்வலர்களும் இந்தியாவிலேயே தொன்மையும் இடையறாத்தன்மையும் கொண்ட சாஸனச்சான்றுகளைப் பெற்ற மடம் இதுவென்பதால் இதனை தமிழகத்தின் வரலாற்றுப்பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதவேண்டும். இதனைப் பழிப்போரின் நடுநிலையும் வரலாற்று ஆர்வமும் நகைப்புக்குரியதே.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி