பாண்டியரின் குழிசியோலை தேர்தல் முறை கல்வெட்டு

 பாண்டியரின் குழிசியோலை தேர்தல் முறை கல்வெட்டு



குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

சோழர் காலத்தில் உத்திரமேரூர் கல்வெட்டும், திருநின்றவூர், சேய்ஞ்ஞலூர் கல்வெட்டுகளும் அக்காலத்தில் நடந்த தேர்தல் குறித்த தகவல்களைத் தருகின்றன.

ஆனால் இப்பெருமைக்கு உரியவர்கள் சோழர்கள் மட்டுமல்ல, சங்ககாலப் பாண்டியர்களும் அரசர்களும் ஆவார்கள். 

ஊரவைக்கு நடத்தப்படும் இத்தேர்தல் முறைக்குக் குழிசியோலை என்று பெயர்.

சங்க இலக்கியமான அகநானூற்றிலும் பாண்டியர் காலத் தேர்தல் முறைபற்றிக் குறிப்புகள் வருகின்றன.

“கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்
பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்” அகம் – 77)

சோழர் கல்வெட்டைவிட நூறாண்டுகளுக்கு முன்பாகக் கிடைக்கும் அதாவது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி மானூரில் உள்ள அம்பலவாணர் கோவிலிலும் கிடைக்கும் பாண்டிய மன்னன் மாறஞ் சடையனின் இக்கல்வெட்டு பாண்டியர் காலம் தொட்டே தமிழகத்தில் தேர்தல் முறை இருத்ததைப் பற்றி விளக்குகிறது. சுமார் கிபி 800ல் அமைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு மானூர் ஊர் மகாசபையின் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதியை தெளிவாக கூறுகிறது. இதில் அந்த கால நகர ஆளுகை முதலிய விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தின் கிராம சபைகளைக் குறிக்கும் ஆகப் பழைய கல்வெட்டான பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டு (பொயு 898), 

    ‘மக்கள் சபையில் மன்றாடுகிறது ஒரு தர்மம் உட்பட மந்திரப் ப்ராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும்’

என்று அந்தக் கிராமத்தின் நீதி சபையின் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. அதாவது உறுப்பினராகக் கோருவோர் தர்ம சாஸ்திரங்களின் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

இன்றைய குடிமையியல், குற்றவியல் சட்டங்களைப் போல, பண்டைக்காலத்தில் வழக்குகள் இந்த தர்மசாஸ்திரங்களின் அடிப்படையிலேதான் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டன. பல சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தர்ம சாஸ்திரங்களை ஆராய்ந்து தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.  எனவே பொதுவாக அறியப்படும் மனு தர்ம சாஸ்திரத்தைத் தவிர  யாக்ஞவல்கியர், ப்ருஹஸ்பதி, பராசரர் போன்றவர்களின் தர்ம சாஸ்திரங்களில் ஏதாவது ஒன்றில் அவர் வல்லுநராக இருக்கவேண்டும் என்பது முதல் தகுதி.  கிராம நீதிமன்றங்களிலும்  தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டதே தவிர தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்பினால் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது. தவிர நீதிசபை உறுப்பினர்களுக்கான மற்றொரு தகுதி அவர் நல்ல நடத்தை கொண்டவராக, சுவ்ருத்தராக, இருக்கவேண்டும் என்பது. 

அடுத்தது குடும்பத்தில் ஒருவருக்கே இந்த சபைகளில் பிரதிநிதித்துவம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மானூர் ஒரு பிரம்மதேயமாக இருந்ததால், அந்த ஊர் நீதி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வேதங்களிலும் ப்ராம்மணங்களிலும் வல்லவராக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வளவு தகுதிகள் ஒருவருக்கு இருக்கிறதா என்று காண தேர்வுகள் வைக்கப்படுவது உண்டு. அதில் தேர்ச்சி பெற்றவரே இது போன்று கிராம நீதி சபைகளில் உறுப்பினராக நியமிக்கப்படுவார். அந்த நீதி சபைக்கே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக்கூறும் உரிமையும் உண்டு.  அக்காலத்தில் பெரும்பாலான வழக்குகள் கிராம நீதி சபை அளவிலேயே தீர்க்கப்பட்டு விடுவது வழக்கம். ஒரு சில வழக்குகள் மட்டுமே மண்டல நீதிமன்றங்களுக்கோ, அரசனுடைய நீதி சபைக்கோ சென்றன. இந்தக் காரணங்களினால் கிராம நீதி சபைகள் வலுவாக அமைக்கப்படுவது தேவையானதாக இருந்தது. பல இடங்களில் அரசனே நேரடியாகத் தலையிட்டு அந்த சபைகளை அமைக்கும் முறை பின்பற்றப்பட்டது. சில இடங்களில் அந்தந்த கிராம சபைகளுக்கே இந்த நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரம் இருந்தது 

திருடியவர், கையூட்டு பெற்றவர், தவறுகள் செய்து தண்டனை பெற்று பின் நல்லவரானோர், மேற்கண்டவர்களின் ஆண், பெண் வழி உறவினர்கள் குழிசியோலை முறையில் போட்டியிட தகுதியவற்றவர்கள் எனப் பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது.

ஐந்தாண்டுகள் பணி செய்தோருக்கு மீண்டும் தேர்தலில் பங்குபெற வாய்ப்பு வழங்குவதில்லை. ஒரு ஆண்டுப் பணி செய்தால், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. வேட்பாளர் மட்டுமின்றி அவர் உடன் பிறந்தவர்கள், தந்தை, மக்கள் யாவரும் இரண்டாண்டு பணி செய்யக் கூடாது என விதிகள் வைத்திருந்தனர். இதில் கிடைக்கும் முக்கியத் தகவல் 70 வயதுக்கு மேல் தேர்தலில் யாரும் போட்டியிடக் கூடாது என்பதாகும். 

இது பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊர்களில் மட்டும் மக்களாட்சி முறையிலான நடந்த ஊர் சபை தேர்தல் முறை - ஊராட்சித் தேர்தல் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி