ஹனுமஜ்ஜன்ம பூமி
ஹனுமஜ்ஜன்ம பூமி
ஹனுமான் பிறந்த இடம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அமைக்கப்பெற்ற குழுவில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். இதற்காகத் தொகுக்கப்பெற்ற சான்றுகளின் சுருக்கம்.
1. ஸ்ரீமத் ராமாயணத்தில் மூன்று இடங்களில் ஹனுமானின் அவதாரம் பேசப்பெறுகிறது. ஆயின் இடம் குறித்த தகவல் இல்லை. தந்தை கேஸரி கோகர்ணத்தை அல்லது ஸுமேருவை ஆண்டிருந்தார் என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
2. ஸ்ரீவேங்கடேச மாஹாத்ம்யம் என்ற நூல் பதிமூன்று புராணங்களிலிருந்து தொகுக்கப்பெற்ற நூல் இந்த நூலில் ஸ்காந்தத்திலிருந்து உள்ள பகுதிகள் மூல ஸ்காந்தத்திலும் கிடைக்கின்றன. வராஹம் மற்றும் ப்ரஹ்மாண்டம் முதலிய புராணங்களிலிருந்து எடுக்கப்பெற்ற பகுதிகள் மூல புராணங்களில் இல்லை. இந்த நூலே ஸ்ரீநிவாஸரின் புராணத்தகவலைத் தருவது. மேலும் திருமலையிலுள்ள கல்வெட்டுக்கள் ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நூல் திருமலைக் கோயிலிலும் கோவிந்தராஜர் ஸந்நிதியிலும் பாராயணத்தில் இருந்ததாகக் கூறுகிறது. இந்த நூலில் மதங்கரின் அருளாணைப்படி அஞ்ஜனா தேவி திருவேங்கடத்தற்கு வந்து ஆகாசகங்கையின் தீரத்தில தவமியற்றி குழந்தையைப் பெற்றமையும் பிறந்தவுடன் பசிதீர திருவேங்கட மலைச் சிகரத்தில் கால்பதித்து ஆதவனைப் பிடிக்கக் கிளம்பிய செய்தியும். அஞ்ஜனை தவமியற்றி மகவை ஈன்றதால் அஞ்ஜனாத்ரி என்ற பெயர் கொண்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது. திருமலைக்குக் கொடுக்கப்பெற்ற இருபது நாமங்களில் அஞ்ஜனாத்ரியும் ஒன்று. அஞ்ஜனையின் ஆச்ரமம் அங்கேயே இருப்பதையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. ராமபிரான் வரும்வேளையில் திருமலையில் ஆஞ்ஜனேயர் தன் அன்னையைத் திருமலையில் கண்டதையும் இந்த நூல் எடுத்தியம்புகிறது.
3. ஸ்ரீமத் ராமானுஜரால் ப்ரமாணமாகக் காட்டப்பெற்ற ஸ்ரீவேங்கடேச இதிஹாஸமாலையும் திருமலையில் அஞ்ஜனா தேவி ஈன்றெடுத்தமையைக் குறிப்பிடுகிறது.
4. அஞ்சனவெற்பு என்னும் பெயர் திருமலைக்கு இரண்டாம் திருவாய்மொழியிலும் திருவேங்கடத் திருவந்தாதியிலும் காணப்பெறுகிறது. திருமலையின் கல்வெட்டொன்று இறைவனை அஞ்ஜனவெற்பன் நாயனார் என்று குறிப்பிடுகிறது.
5. ஸ்ரீவேதாந்ததேசிகர் தயாசதகத்தில் ஐந்து இடங்களிலும் ஹம்தூதத்திலும் திருமலையை அஞ்ஜனாத்ரி என்று குறிபபிடுகிறார். ஸ்ரீரங்கம் திருமேனிகளை இஸ்லாமியர் ஆதிக்கத்தை முறியடித்து மீண்டும் கோபணார்யன் நிறுவினான். அதைப் பாடும் முகமாக வேதாந்த தேசிகர் இயற்றியதாக குருபரம்பராப்ரபாவம் கூறும் ச்லோகம் ஒன்று திருவரங்கத்தில் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டும் திருமலையை அஞ்ஜனாத்ரி என்றே குறிப்பிடுகிறது.
6. பட்டபாணர் என்பவர் வேமபூபால சரிதம் என்ற நூலை இயற்றியவர். அவரும் திருமலையை அஞ்ஜனாத்ரி என்கிறார்.
7. தாள்ளபாக்கம் அன்னமாசார்யர் மூன்று இடங்களில் அஞ்ஜனாத்ரி என்றே திருமலையைக் கூறுகிறார்.
8. கர்ணாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீபுரந்தரதாஸரும் ஸ்ரீவேங்கடேசதாஸரும் அஞ்ஜனாத்ரி என்றே திருமலையைக் குறிப்பிடுகின்றனர்.
9. உபநிஷத்துக்களுக்கு உரை எழுதிய ஸ்ரீரங்கராமானுஜர் அஞ்ஜனாத்ரி நாதர் என்றே குறிப்பிடுகிறார்.
10. தரிகொண்ட வேங்கமாம்பாவும் வீரப்ரஹ்மேந்த்ரரும் அஞ்ஜனாத்ரி என்று குறிப்பிட்டுள்ளனர்.
11. காஞ்சியிலும் ஐயங்கார் குளத்திலும் கல்வெட்டில் அமைந்துள்ள லக்ஷ்மீகுமார தாதாசார்யாரின் ஹனுமத்விம்சதி அஞ்ஜனாத்ரி என்றே குறிப்பிடுகிறது.
12. 1800-இல் ஸ்ட்ராட்டன் என்னும் பிரிட்டிஷ் ஆட்சியர் ஆஞ்ஜனேயர் பிறந்தமையால் அஞ்ஜனாத்ரி என்னும் வழக்கு திருமலைக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
13. ஸ்ரீவேங்கடேச அஷ்டோத்தரத்திலும் ஸஹஸ்ரநாமத்திலும் ஆஞ்ஜனேயரைப் பிறப்பித்த செய்தி ஸ்தோத்ரமாக அமைந்துள்ளது.
ஆக இத்துணை சான்றுகளும் அஞ்சன வெற்பு அல்லது அஞ்ஜனாத்ரி என்று பெயருடைய மலை திருப்பதி திருமலையே என்று குறிப்பிடுகின்றன. இவ்வளவு சான்றுகளில் ஒரு சான்று கூட அவருடைய அவதார ஸ்தலமாகக் கருதப்பெறும் இடங்களுக்கு இல்லை. கர்ணபரம்பரைச் செய்தி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாசகங்கையின் கரையில் அஞ்ஜனாதேவியும் பாலஹனுமானும் இன்றும் கொலுவிருக்கிறார்கள். விக்ரஹங்கள் பழையதானாலும் கோயில் 2014-இல் மீட்டுருவாக்கப்பட்டிருக்கிறது.
படம் அஞ்ஜனாதேவி, ஆகாசகங்கை தீரம், திருமலை, திருப்பதி
Comments
Post a Comment