கல்வெட்டு மறு பதிப்பு

 



 

வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ள சாசனங்களான கோவில் கல்வெட்டுகள்.

இக்கல்வெட்டுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட்டனர் நம் முன்னோர்.

 

ஒரு அரசன். கோவில் ஒன்றை செப்பனிடும் போது, அங்குள்ள பழையக் கல்வெட்டுச் செய்திகளை படியெடுப்பார்கள். செப்பனிடும் வேலை முடிந்தபின்பு படியெடுத்த கல்வெட்டுச் செய்தியை மீண்டும் கல்லில் வெட்டுவார்கள்.

  " இது ஒரு பழம் கல்வெட்டு " என்ற குறிப்புடன் கல்வெட்டுச் செய்தியை பதிவு செய்வார்கள்.

 

குடுமியான்மலைக் கோவில் மடப்பள்ளியின் கீழ்புறச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு.

 

மதுரைகொண்ட கோபரகேசரியான பராந்தகனின் 33 ஆம் ஆட்சியாண்டு. அதாவது கி.பி.940. 

 

பராந்தகனின் படைத்தளபதியான கொடும்பாளூர் வேளிர் குல சிற்றரசன் பராந்தகன் குஞ்சரமல்லனான வீரசோழ இளங்கோ வேளான் என்பவர் இலங்கையின் மீது படையெடுத்தார்.

 

படையெடுப்பு தனக்கு வெற்றியைத் தரவேண்டும் என்று குடுமிநாதருக்கு நில தானம் செய்து வேண்டுகிறார்.

 

" ஈழ மறிய போகிறேன் "

 

என்பது கல்வெட்டு வாசகம்.

 

நடைப்பெற்ற ஈழப்போரில் வெற்றியும் பெற்றார். பராந்தகனுக்கு மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி என்ற விருதுப்பெயரும் கிடைத்தது.

 

இக்கல்வெட்டு சாசனம் குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலில் வெட்டப்பட்டுள்ளது.

 

இது கி.பி. 940 இல் நடந்த நிகழ்வு.

 

280 ஆண்டுகளுக்குப்பிறகு.

கி.பி.1220.  மாறவர்மன் 

சுந்தரபாண்டியன் காலம். அவனது 4 ஆம் ஆட்சியாண்டு. பாண்டிய நாட்டை மீட்டு, சோழர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் என்று பெரும் புகழ் பெற்ற பாண்டிய மன்னன்.

 

இவரது காலத்தில் குடுமியான்மலைக் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கின.

 

280 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட பராந்தகனின் கல்வெட்டை படியெடுத்து, கோவில் வேலை முடிந்தபிறகு அச் செய்தியை மீண்டும் கல்லில் பதிவு செய்தார்கள்.

 

" இதில் கல்வெட்டு படியெடுத்து படி எடுத்தபடியே வெட்டுகவென்று உடையார் அருளி செய்த வெட்டின படியாவது "

 

என்று சாசனம் தொடங்குகிறது.

 

சோழனது கல்வெட்டு சாசனம், பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது.

 

280 ஆண்டுகளுக்கு முந்தைய அதே கல்வெட்டுச் செய்தி மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

 

அவ்வாறாக கல்வெட்டுகளைப் போற்றி, படியெடுத்து, பாதுகாத்த நமது வரலாற்று ஆவணங்கள் ..

 


 

மா.மாரிராஜன்.

 

( Refrence ..

  புதுக்கோட்டை மாவட்டக்கக் கல்வெட்டுகள். No 255)

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி