நண்ணற் கருமுரன் மண்ணைக் கடக்கம்


 


காலம் .. 

கி.பி.1020.

 

மண்ணைக் கடகம் என்னும் மானியக்கேடா நகரம்.

 

முன்பு இராஷ்டிரக்கூடர்களின் தலைநகராகவும் தற்போது சாளுக்கியர்களின் அதிமுக்கிய நகராகவும் இருந்துவருகிறது.

 

நகரத்தின் நுழைவு வாயிலாக அமைந்திருந்தது பிரம்மாண்ட மானியக் கேடா கோட்டை.

 

யாரலும் வெல்லமுடியாத பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஒரு கோட்டை.

 

மேகத்தை முத்தமிடும் உயர்ந்த மதில் சுவர்களும் , பூமியை சூழ்ந்திருக்கும் உலோகாலோக மலையைப் போன்ற நீண்ட சுவர்களை கொண்ட கோட்டை. எதிரிகள் இக்கோட்டையை நெருங்க தங்கள் மனதால் நினைத்தாலே அச்சமடைவார்களாம்.

 

ஆனால்...

அன்று ஒரு நாளில் இக்கோட்டையும் முற்றுகையிடப்பட்டது.

 

உயர்ந்த மதில் சுவர்கள் தகர்க்கப்பட்டன.. அலையலையாய் வந்த குதிரைகளின் மேல் அமர்ந்த சோழவீரர்களின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் கதிரவனின் ஒளியை மறைத்தன. 

 

பல ஆயிரம் சோழதேசத்து யானைகள் கோட்டைச்சுவரை முட்டியபோது பல நூறு இடிகள் பூமியில் விழுந்த பெருவோசைபோல் இருந்தது. பிரளயக்காலத்தில் நிலம் பிளப்பதுபோல் கோட்டை தகர்ந்து விழுந்து வாயில் கதவு உடைத்தெறியப்பட்டு சோழவீரர்கள் கோட்டைக்குள் பிரவேசித்தனர்.

 

யாராலும் வெல்லமுடியாத மானியக்கேடக் கோட்டை சோழர்களால் கைப்பற்றப்பட்டது.

 

சோழ வீரர்கள் வெற்றிக் களிப்பில் கொண்டாட்டத்தில் இருக்க, ஒருவரை மட்டும் காணவில்லை..

 

எங்கே அவர்...

சக்கரவர்த்தி உடையார் இராஜேந்திர சோழர் எங்கே..

 

கோட்டை வாயில் கதவை உடைத்து கோட்டையினுள் முதல் நபராய் உள்நுழைந்த இராஜேந்திரர் எங்கே..?

 

கோட்டையின் தெற்குப்புறத்தில்  அமைந்த  மலைமுகடுகள் சூழ்ந்த அடர்ந்த காடு. காட்டிற்குள் பாய்ந்துசெல்லும் புரவியின் மீது அமர்ந்து இருந்தார் சோழ சக்கரவர்த்தி இராஜேந்திரன்.

 

உடன் பயனிக்கும் படைத்தளபதிகள் ஐவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளோம். யாராலும் நெருங்கமுடியாத மானியக்கேடா கோட்டையைத் தகர்த்து தரைமட்டமாக்கியுள்ளோம். வீரர்கள் அனைவரும் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசர் மட்டும் காட்டிற்குள் வேட்டையாடச் செல்கிறாரே..? என்ன விநோதம் இது..?

 

அரசரின் போர்க்கவசம் அகற்றப்படவில்லை. குருதி பெருக்கெடுக்கும் காயங்களுக்கு மருந்திடவில்லை. உணவும் எடுக்கவில்லை.. வெற்றிக்களிப்பும் குதூகலம் நிரம்பிய இவ்வேளையில்... வேட்டைக்குச் செல்வது என்ன ஒரு விநோதம்.?

என்ன காரணம்..?

 

காரணம் பற்றி இராஜேந்திரர் மட்டுமே அறிவார். 

 

இப்போதுதான் இராஜேந்திரரின் உள்ளம் அமைதியடைந்திருக்கும். அவரது திருமுகத்தில் பேரானந்தம்.  குதிரையின் மீது அமர்ந்தவாறே.. வில்லில் நாணேற்றி வேட்டைக்குத் ஆயத்தமாகிறார்..

 

என் தந்தையின் சபதம் நிறைவேறியது. இராஜராஜரின் மகனான இந்த இராஜேந்திரனின் வாழ் நாள் நோக்கமும் நிறைவுபெற்றது.

 

என் ஐயனே...

மும்முடிச்சோழ இராஜராஜனே.. இதோ நீங்கள் சூளூரைத்த செயலை நிறைவேற்றுகிறேன். மானியக்கேடத்தைக் கைப்பற்றி வேட்டைக்குச் செல்கிறேன் தந்தையே...

 

அது என்ன சபதம்.?

அதுவும் இராஜராஜர் சூளூரைத்த சபதம்..?

 

இதை அறிய ஒரு 70 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்..

 

கி.பி. 950.

இராஷ்டிரகூடர்களின் தலைநகரம் மானியக்கேடா.. இராஷ்டிரகூடர்களின் பெரும் பேரரசன் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையில் மானிக்கேடா கோட்டையிலிருந்து பெரும்படை ஒன்று சோழதேசத்தை நோக்கி புறப்பட்டது.

 

கிருஷ்ணன் படையெடுத்து வருகிறார் என்றால்,

சோழ வங்காள கன்னோஸிய ஆந்திர பாண்டிய தேசங்கள் நடுங்குமாம். இராஷ்டிரகூட ஆவணங்கள் பதிவு செய்கின்றன.

 

சோழச்சக்கரவர்த்தி பராந்தகச் சோழரின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான இராஜாதித்தர் தலைமையில் பெரும்படை ஒன்று புறப்பட்டது.

 

தொண்டைமண்டல எல்லையான தக்கோலம் என்னுமிடத்தில் சோழர்களும் இராஷ்டிரக்கூடர்களும் களம் கண்டனர்.

 

கடும் போர்.உக்ரமான மோதல். கங்கமன்னன் பூதுகன் விட்ட அம்பை தன் மார்பில் தாங்கிய இராஜாதித்தர் யானைமீது அமர்ந்தவாறே வீர மரணமடைந்தார்.

 

மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிர கூடர் படை முழுமையாக வெற்றிபெற்றது. சோழர்களின் பேரிழப்பாக இப்போர் அமைந்தது. தொண்டை மண்டலமும் இராஷ்டிரகூடர் வசம் சென்றது.

 

பராந்தகனுக்குப் பின்வந்த சோழ மன்னர்களுக்கு ஒரு பழி தீர்க்கும் அவசியம் ஏற்பட்டது. சோழப்படைகள் இராஷ்டிரகூடத்தில் நுழைந்து மானியக்கேடா நகரம் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்க

வேண்டும்.

 

கி.பி.967.மூன்றாம் கிருஷ்ணனின் மறைவுக்குப்பிறகு இராஷ்டிரக்கூடர்களின் வீழ்ச்சி தொடங்கியது.

 

சாளுக்கியர்கள் ஆதிக்கம்பெற்று மானியக்கேடா நகரை கைப்பற்றினார்.

 

சுந்தரச்சோழன் மற்றும் ஆதித்த கரிகாலன் காலத்தில் தொண்டை நாட்டை சோழர்கள் மீட்டனர்.

 

பேரரசர் இராஜராஜர் காலத்தில் சோழர் ஆதிக்கம் விரிவடைந்தது. சாளுக்கியர்களை இராஜராஜர் வெற்றி கண்டாலும் மானியக்கேடா நகரை அவரால்  கைப்பற்ற இயலவில்லை. 

 

மானியக்கேடத்தை  கைப்பற்றும் வரை நான் குதிரைமீது அமர்ந்து வேட்டைக்குச் செல்வதில்லை என்ற சபதமும் மேற்கொள்கிறார். கடைசிவரை அவரால் மானிக்கேடத்தை பிடிக்க இயலவில்லை.

வேட்டைக்கும் செல்லவில்லை. 

 

இராஜேந்திரனின் காலம். தந்தையின் சபதத்தை நிறைவேற்றுவது தனயனின் கடமையல்லவா..!

 

இதோ நிறேவேற்றிக் கொண்டிருக்கிறார்..

 

மானியக்கேடத்தை கைப்பற்றிகுதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்கிறார்..

 

இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் மேலும்

ஒரு வரி இணைகிறது.

 

பகைவரால் நெருங்க முடியாத அரண்கள் கொண்ட மண்ணைக் கடக்கத்தை வீழ்த்தி என்று பொருள்படும்..

 

" நண்ணற் கருமுரண் மண்ணைக்கடக்கமும் "

 

என்ற வரியும் மெய்கீர்த்தியில் இடம்பெற்றது.

 

இராஜேந்திரரின் 8 ஆம் ஆட்சியாண்டு. 

கி.பி.1020 இல் வெளியான கரந்தைச் செப்பேட்டில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஆவணமாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

 

கரந்தை செப்பேடு..

செய்யுள் 51 - 57

 

" எதுவரையில் மான்யகேடத்தை பிடிக்கவில்லையோ அதுவரை மலைப்பகுதியில் வேட்டைக்குச் செல்லமாட்டேன் என்ற அவனுடைய தந்தையின் சூளுரையை நிறைவேற்ற மதுராந்தகன் மான்யக்கேடத்தை பிடிக்க ஆவலுடையவனாய் ஆனான்.

 

மான்யக்கேடம் மேகத்தை முத்தமிடும் மதில் சுவர்களால் சூழப்பட்டது. உலோகாலோக மலையால் புவிமண்டலம் சூழப்பட்டதை போன்றது.

 

தூயபுகழினால் திசைகளை அலங்கரித்த மான்யகேடத்தை இராஜேந்திரன் வென்றான். மிகச்சிறந்த தனது குதிரையில் அமர்ந்து தந்தையின் சூளுரையை நிறைவேற்ற வேட்டைக்குச் சென்றான். அவனது சிற்றரசர்கள் அவனை பின்தொடர்ந்தனர்."

 

மான்யக்கேடா இன்று மால்கேட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கர்நாடாக மாநிலம் குல்பர்கா மாவட்டத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் மால்கேட் நகரம் அமைந்துள்ளது.

 

மால்கேட் கோட்டையின் சிதிலமடைந்த எச்சங்களை இன்றும் நாம் காணலாம்..

 

அன்புடன்...

மா.மாரிராஜன்.

 

புகைப்படங்கள்...














Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு