புரசைபட்டு ஏரிக் கல்வெட்டு மற்றும் நடுகற்கள்

 



 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரவளூர் அருகிலுள்ள புரசைப்பட்டு என்ற கிராமத்தில் சில நடுகற்கள் உள்ளன என்பதை பெரியசாமி ஆறுமுகம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். அந்த தகவலின் பேரில்  திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்று ஆய்வு நடுவம் ச.பாலமுருகன்,.சுதாகர்,சி.பழனிச்சாமி, ராஜா மற்றும் குமரவேல் இராமசாமி ஆகியோர் நடுகற்களை ஆவணப்படுத்தும் நோக்கில் அங்கு சென்று பார்த்தனர். 

 

சோழர் கால சிற்பமைவு கொண்ட ஒரு நடுகல்லும் அதனருகில் அழகிய சோழர் கால எழுத்தமைதி கொண்ட தனி கல்வெட்டும் இருந்தன. கல்வெட்டு படித்து ஆய்வு செய்த போது அது சோழன் மன்னன் முதலாம் பராந்தகன் என்பவரின் 15 வது ஆட்சியாண்டை சேர்ந்தது என்பதும் அவ்வூரைச் சேர்ந்த அரச அதிகாரியொருவர் அங்கு ஒரு ஏரியை வெட்டி அதன் பராமரிப்பு செலவுக்காக ஏரிப்பட்டி தானம் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க தகவல் இருப்பதையும் அறிந்தனர். 

 

கல்வெட்டு வாசகம்:

 

ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொ

ண்ட கோப்பரகேசரி ப

ன்மற்கு யாண்டு பதி

னைஞ்சாவது வாணகோ

ப்பாடிப் பெண்ணைத்

தென்கரைப் புறைவே

ளூர் இருந்து வாழுஞ் செ

யகாளையன் ஆச்ச பி

டாரனென் நான்

கண்ட ஏரிக் கீழ்ப்

பெரிய செறு

ஏரிப்பட்டி அட்டி

னென் இது இறக்கி

னான் ஏழாநரகத்தி

(.)ற்க் கிழா நரகம் புரு(கு)

வான். 

 

பல்லவர்களின் ஆட்சியில் இந்தப் பகுதி பெரும்பான்மையாக மேய்ச்சல் சார்ந்த நடுகல் சமுதாயமாகவும் இனக்குழு தலைவர்களின் ஆதிக்கத்திலும் இருந்திருக்கிறது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பின்னர், இங்கு பல்வேறு நிர்வாகம் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். குறிப்பாக அளவில் அதிகமான ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன. பல்லவர் காலத்தில் ஏரிகள் வெட்டப்பட்ட சான்றுகள் இருந்தாலும் அவை அவர்களின் கற்றளிகளுக்கு அருகிலோ நகரங்களுக்கு அருகிலோ தான் பெரும்பாலும் அமைத்தன. ஆனால் பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகு குறிப்பாக முதலாம் பராந்தகன் காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகள் ஊக்குவிக்கும் நோக்கில் இது போன்ற பல ஏரிகள் வெட்டப்பட்டது.இதற்கான  சான்றுகள் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கல்வெட்டுகளில் நிறையக் கிடைக்கின்றன. 

 

'பொரவளூர்' என நிகழ்கால பெயர்கொண்ட இவ்வூரின் தொன்மைப் பெயர் புறைவேளூர் என்பதையும், இந்த ஊர் பண்டைய வாணகோப்பாடி நாட்டின் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது எனவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அதன் நிலவியல் அமைப்பும் தொன்மையும் இன்றளவும் மாறாமல் உள்ளதை பார்க்க முடிகிறது.

 

இக்கல்வெட்டில் "பெரிய செறு ஏரிப்பட்டி" என்ற வாசகம் ஓர் செறிவு மிக்க சொல்லாட்சியாக இங்கு பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் நன்கு பண்படுத்தி உழவுக்கும் வேளாண்மைக்கும் தகுதியாக இருக்கும் நிலத்தினைக் குறிப்பதற்கு 'செறு' என்ற சொல்லினை புறநானூறு, ஐங்குறுநூறு பாடல்களில் புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். ஓராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் தான் கொடுத்த ஏரிப்பட்டி தானத்தின் வளத்தை குறிப்பிட எவ்வளவு எளிமையான அதேசமயம் செறிவு மிக்க சொல்லினை அவர்கள் கல்வெட்டில் பயன்படுத்தியுள்ளனர் என நினைக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. மேலும் வடதமிழகத்தில் நிலத்தினை குறிக்க பேச்சு வழக்கில் 'கொல்ல/கொல்லை' சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்தச்சொல்லும் சங்க இலக்கியங்களில் நிலத்தினை குறிக்கும் சொல்லாகவே பயின்று வந்துள்ளன. 

 

ஆகவே, இங்கு கிடைத்துள்ள எட்டு நடுகற்கள் மற்றும் ஏரி கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் பெறுவதோடு சங்க சொற்களை தாங்கி நிற்கும் கல்வெட்டும், வட்டாரவழக்கு சொல்லும் ஓரிடத்தில் கிடைப்பது மொழியில் ஆய்விற்கு பயன்படும் ஓர் முக்கிய ஆவணம் என்பதில் ஐயமில்லை. 

 

நன்றி: 

கல்வெட்டு அறிஞர் முனைவர்  இராஜகோபால் சுப்பையா, முனைவர் இரா. பூங்குன்றன்.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு