நெசவாளர் கொண்டாடும் '' தறிபுகு விழா ''

 



 மனிதனின் மிக முக்கியத் தேவைகளில் ஆடையும் ஒன்று.  இவ்வாடையைத் தயாரிப்பவன் 'நெசவாளி'.  நெசவாளியின் தொழில் 'நெசவுத் தொழில்'.  இத்தொழில் செய்யும் பொருளினைக் கொண்டு இவற்றை இரு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை ஒன்று, கைத்தறி; மற்றொன்று, விசைத்தறி. நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் நூலினை அடிப்படையாகக் கொண்டும் இத்தொழிலினை இரு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை ஒன்று, பருத்தி நெசவு; மற்றொன்று பட்டு நெசவு. அண்மைக் காலமாக நெசவாளர்களிடையே விசைத்தறியின் மோகம் அதிகரித்து வருவதால் கைத்தறி செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தின் வடக்குப் பகுதியில் செங்குந்தர்கள் அதிகம் வசிக்கும்  பள்ளிப்பட்டு வட்டம் (பொதட்டூர் பேட்டை, சொரக்காய் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, இராமகிருஷ்ணராஜி பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள புச்சிரெட்டிபள்ளி, நல்லாட்டூர், நல்லவாடம்பேட்டை, மத்தூர், மத்தேரி, சிந்தலபட்டடை, குருவராஜி பேட்டை, பனப்பாக்கம், ஆரணி, சோளிங்கர், ஏகாம்பரகுப்பம், நாராயணவனம், சத்திரவாடா போன்ற பகுதிகளில் தமிழரின் ஆண்டுத் தொடக்கமான தைப்பொங்கலுக்குப் பின் நெசவுத்தொழில் செய்வதை ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.  இவ்விழாவே தறிபுகு விழா எனப்படும்.  இவ்விழா காலப்போக்கில் காலத்தின் தேவைக்கு ஏற்ப எப்படி மாறிவிட்டது என்பதையும், அதன் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. 

 

 ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் வார நன்னாளில் தறியில் புகுதலே 'தறி புகுதல்' என்பர்.  இந்நாளை நெசவாளர் அனைவரும் விழாவாகக் கொண்டாடுவர்.  இவ்விழாவே 'தறி புகு விழா' எனப்படும்.  இத்தறி புகு விழா ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பெறுகிறது.  தை மாதமே ஆண்டின் தொடக்கமாக இவர்கள் கருதுகின்றனர்.  இந்தியாவில் இந்துக்கள் சூரிய ஆண்டையும், முகமதியர்கள் சந்திர ஆண்டையும் குறிப்பிடுவர்.  சூரிய ஆண்டுக்குள் இடம்பெறும் நாள்கள் சூரியனின் உதய காலத்தை அடிப்படையாகக் கொண்டும், சந்திர ஆண்டுக்குள் இடம்பெறும் நாள்கள் சந்திரனின் உதய காலத்தை அடிப்படையாகக் கொண்டும் தொடங்கும் என்பர். நாட்டில் சூரிய வழிபாடு இடத்திற்கு இடம் தொழிலுக்குத் தொழில் மாறுபட்டமைவதைக் காணமுடிகிறது.  இந்நிலையில், நெசவாளர்கள் தங்களின் ஆண்டுத் தொடக்கம் நன்றாக அமையவேண்டும் என்று சூரியனை வணங்கித் தங்கள் தொழிலைத் தொடங்குகின்றனர்.  

 

 மார்கழி மாத இறுதி, போகியன்று தங்கள் தொழிலை நிறுத்தும் நெசவாளர்கள் தை மாதம் முதல் வாரம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர்.  இரண்டாம் வாரம் 'மயிலேறி' (தைப்பொங்கல் நாளிலிலிருந்து எட்டாம் நாள்)க்கு அடுத்த ஒரு நல்ல நாளில் தறி புகுகின்றனர்.  இந்நாளை ஊர்ப் பெயரியவர்கள் தண்டோரா மூலம் அறிவிப்பர்.  அறிவித்த நாளன்று நெசவாளர்கள் அனைவரும் தங்கள் ஊரில் இருப்பர்.  வெளியூர் சென்றவர்களும் ஊர் திரும்பிவிடுவர்.

 

 குறிப்பிட்ட நாள் வந்தவுடன் அதிகாலையில் குடும்பத்தார் அனைவரும் குளித்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்து தெருவில் கோலம் போடுவர்.   பின்னர் கைத்தறிப் பொருட்கள் அனைத்தையும் நீர் விட்டுக் கழுவியும் துடைத்தும் சுத்தம் செய்வர்.  அதன்பின், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் பூ ஆகியவற்றைக் கொண்டு தறி மற்றும் அதற்குப் பயன்படும் ஏனைய உபகரணங்களுக்கு அலங்காரம் செய்வர்.  அன்று போட்ட பசுஞ்சாணத்தைக் கொண்டு சாணப்பிள்ளையார் செய்வர்.  இச்சாணப்பிள்ளையாரைச் சந்தனம், குங்குமம் மற்றும் அருகம்புல்லால் அலங்காரம் செய்வர்.  இச்சாணப்பிள்ளையாரைக் கைத்தறிக்குப் பக்கத்தில் கதிரவன் ஒளிபடும் இடத்தில் வைப்பர்.  ஊறவைத்த பச்சரியுடன் வெல்லம் கலந்து ஒரு தட்டில் சாணப்பிள்ளையாருக்கு எதிரில் வைப்பர்.  அடுத்த தட்டில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் மாவிளக்கு வைப்பர்.

 

 ஊர்ப் பெயரியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் நெசவாளர் அனைவரும் மாவிளக்கேற்றி கதிரவனை நோக்கிச் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  குடும்பத்தார் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.

 

 இவ்வழிபாடு முடிந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் நெசவுத் தொழிலில் தங்கள் தங்களின் பணிகளைச் செய்யத் தொடங்குவர்.  முதலில், குடும்பத்தில் குடும்பத் தலைவியோ அல்லது பெண் பிள்ளையோ பல்லை இராட்டினம் கொண்டு பல்லையில் நூல் சுற்றிப் பின் தார் இராட்டினத்தில் தார் சுற்றுவர்.  அடுத்து, குடும்பத் தலைவரோ அல்லது ஆண்பிள்ளையோ புதியதாகத் திரித்த தார் எடுத்துக்கொண்டு தறியில் புகுந்து நெசவு செய்வர்.  அதன்பின் ஒவ்வொருவராகத் தறியில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நெசவு செய்வர்.  கூலியாட்கள் இருப்பின் அவர்களும் அவர்கள் பணிபுரியும் வீட்டினரின் தறியில் தறி புகுந்து நெசவு செய்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  இம்மகிழ்ச்சி என்றும் நிலைக்க சூரியனையும் முழுமுதற் கடவுளான சாணப்பிள்ளையாரையும் வணங்கி வழிபடுவர்.  

 

 இதற்குப் பிறகு தாங்கள் நூல் பெறும் மளிகை(நூல் வழங்கும் இடம்)க்குக் குடும்பத்தலைவர் சென்று புதிய கணக்குத் தொடங்கி நூல், பணம், இனிப்பு ஆகியவற்றைப் பெற்று வருவர்.  இவ்வாறு ஆண்டுத் தொடக்கத்தில் பெறுவதால் ஆண்டு முழுவதும் மென்மேலும் தொழில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.  இதுவே தறிபுகு விழாவன்று நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும்.

 

 நெசவுத் தொழிலின் துணைத் தொழில்களில் ஒன்றான பாவு சுற்றுதல் என்பது மட்டும் பிறிதொரு நெசவாளி செய்து கொடுப்பதாகும்.  பாவு சுற்றுதல் என்பது பொந்தாக இருந்த வண்ண வண்ண நூலினைச் சிலப்பையாக எடுத்து, கொமக்கோல் மற்றும் குச்சி இராட்டினம் கொண்டு பல்லை இராட்டினத்தில் பல்லையில் சுற்றுவர்.  இவ்வாறு சுற்றிய பல்லை நூலினைப் பாவு சுற்றுபவர் பாவு ஆலையில் நெசவு செய்யப்படும் வண்ணத்திற்கொப்ப வண்ண நூல் சுற்றப்பட்ட பல்லைகளை வைத்து பாவு ஆலையில் பாவு சுற்றுவர்.  இந்தப் பாவு 100 முதல் 150 மீட்டர் வரை இருக்கும்.  இத்தொழில் செய்வதற்கு நான்கு கைத்தறி போடும் அளவிற்கு இடவசதி தேவைப்படுவதால் இத்துணைத்தொழில் மட்டும் குடும்பத்து உறுப்பினர்களால் மேற்கொள்ளாமல் பிறிதொரு நெசவாளியால் செய்து தரப்படுகிறது.  இத்தொழிலினைப் பெரும்பாலும் கைம்பெண்களே செய்கின்றனர்.  சில ஆண்களும் செய்கின்றனர்.  நெசவுத் தொழில் சார்ந்த இந்தப் பாவு சுற்றுதல் தொழிலும் தைப்பொங்களுக்கு அடுத்த தறிபுகு விழா நாளிலேயே ஊர்ப் பெயரியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் மாவிளக்கேற்றி கதிரவனை நோக்கிச் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  

 

தை மாத முதலில் பாவு ஆலையில் முதல் பாவு ஏற்றுவதற்குக் கடும் போட்டி நிலவும்.  முதல் பாவு ஏற்றுவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே பாவு சுற்றுபவரிடம் என்னுடைய பாவு முதலில் சுற்றவேண்டும் என்று சொல்லிச் செல்வர்.  பலர் இவ்வாறு சொல்லிச் செல்வதால் பாவு சுற்றுபவர்க்கு முதல் பாவு சுற்றுவதில் கடும் சிக்கல் ஏற்படும்.  முதன் முதலில் தன்னுடைய பாவு சுற்றினால் ஆண்டு முழுவதும் நிறைய பாவு சுற்றலாம் என்று நம்புகின்றனர்.  பெரும்பாலான நெசவாளர்கள் கூட்டுக் குடும்பமாகவே இருப்பதால், இச்சிக்கலைப் போக்குவதற்குப் பாவு சுற்றுபவர் பெரும்பாலும் தனக்கோ அல்லது தன்னுடைய மகன்களுக்கோ பாவு சுற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பார்.  பாவு ஆலையில் முதல் பாவு சுற்றிக் கொள்ள நெசவாளர்களிடையே கடும் போட்டி நிகழும்.  முதல் பாவு சுற்றுதல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதாகக் கருதி இக்கடும் போட்டி நிகழும். 

இன்னொரு துணைத்தொழில் நூலிற்கு வண்ணம் போடுதல்.  வண்ணம் போடுதலும் நெசவுத் தொழிலில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  பருத்தியில் இருந்து காரிகமாக வரும் நூலிற்கு வண்ணம் கொடுக்கப்படுகிறது.  வௌ;ளை, கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற பல்வேறு வகையான வண்ணங்கள் காரிக நூலிற்குத் தரப்படுகிறது.  இவ்வாறு வண்ணம் கொடுப்பவர்கள் சாயப்பட்டறையை வைத்து வண்ணம் கொடுக்கின்றனர்.  ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் தைப் பொங்கலுக்குப் பிறகு சாயப்பட்டறையில் தொழில் தொடங்கும் முன் முன்னர் குறிப்பிட்டது போல் விழாவெடுத்து சூரிய வழிபாடு செய்து தொடங்குகின்றனர்.

 

 இவ்விழா இத்துடன் நின்றுவிடுவதில்லை.  இதன் தொடர்ச்சியாக நெசவுத் தொழில் சார்பான துணைத்தொழில்கள் தொடங்கும் ஒவ்வொரு நாளிலும் அதற்கேற்ப விழா எடுக்கின்றனர்.

 

 நூல் மளிகையில் முதலில் பெற்று வந்த நூலை இழைத்துப் பாவு ஆலை கொண்டு கையால் சுற்றிப் பாவாக்குகின்றனர்.  இப்பாவைத் தெருவில் தோயும் போதும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  தெருவில் போடும் ஒவ்வொரு குடும்பத்து முதற் பாவிற்கும் முன்னர் சொன்னது போல் கதிரவன்-சாணப்பிள்ளையார் வழிபாடு நிகழ்த்துவர்.  இவ்வழிபாடு நிகழ்த்தாமல் தை மாத முதல் பாவை எவரும் வீட்டிற்குள் எடுத்துச் செல்வதில்லை.  அதாவது, பாவு ஆலை கொண்டு சுற்றிய பாவை தறி புகு விழாவன்றோ அல்லது அதற்கு அடுத்த தமக்குகந்த நல்லதொரு நாளில் தெருவில் பாவு தோய்கின்றனர்.  சூரியன் உதயமாவதற்கு முன்னமே தெருவில் சாணப்பிள்ளையாரைப் பாவு போடும் மேற்கிலிருந்து கிழக்குதெற்கிலிருந்து வடக்கு, வடக்கிலிருந்து தெற்குத் திசையில் வைத்து கற்பூர தீபம் காட்டி குதிரை கட்டுவதற்குக் கடப்பாறை தட்டுவர்.  அதன் பிறகு பாவு விரித்து இழைப் போக்குகளைச் சரிசெய்து, கஞ்சி ஊற்றிப் பிசைந்து ஈர நூலாக்குவர்.  இவ்வாறான ஈர நூலினை விரித்து காற்றாற்றிப் பசை போடுவர்.  பசை நூல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க புணியில் அலகு கொண்டு நூலினைப் பிரித்து தனித்தனியாக ஆக்குவர்.  பசை காய்ந்தவுடன் விரிந்த நிலையில் பாவை உருளை கொண்டு சுற்றுவர்.  இவ்வாறு பாவு பசை போட்டு சுற்றி முடித்த பிறகு தெருவில் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  குடும்பத்தார் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  

 

 கைத்தறித் தொழிலில் அதனைச் சார்ந்த துணைத்தொழில்களில் நூலிற்கு வண்ணம் போடுதல் மற்றும் பாவு சுற்றுதல் தவிர்த்து ஏனைய துணைத் தொழில்களான நூலிழைத்தல், பாவுக்குப் பசை போடுதல், தறியில் பிணைத்தல், தார் சுற்றுதல், நெசவு செய்தல் போன்ற அனைத்து செயல்களையும் ஒரு குடும்பத்து உறுப்பினர்களே செய்கின்றனர்.  

அறிவியல் வளர;ச்சிக்கு ஏற்ப காலவோட்டத்தில் நெசவுத் தொழில் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.  காரிக நூலிற்குப் பல்வேறு வண்ணங்கள் போட்டு, வண்ண பொந்து நூலிற்குப் பசைபோட்டு பல்லையில் சுற்றி, பாவு ஆலை மூலம் பாவு உருளை சுற்றுகின்றனர்.  பொந்து நூலிற்கே பசை போடுவதால் தெருவில் பாவு பரப்பி பசை போட்டு உருளையில் சுற்றும் வேலை தவிர்க்கப்படுகிறது. வீட்டிற்கு வெளியே வெயிலில் செய்யப்படும் இவ்வேலை பொந்துக்குப் பசை போடுவதால் பாவு சுற்றும் ஆலையின் செயற்பாடு வேறு விதமாக மாற்றி அமைக்கப்படுகிறது.  இவ்விதத்தில் பாவு சுற்றும் ஆலையானது உருளையாக மாறி, உருளையிலே பசை போட்ட நூலினைச் சுற்றிக் கொடுத்து விடுகின்றனர். 

 

உருளைப் பாவு தறியில் பழைய பாவுடன் பிணைத்தல் மற்றும் பிணைத்த பாவு, ஊடை நூலினை பல்லையில் சுற்றி, குழலில் தார் சுற்றி, நாடாவில் தார் ஏற்றி நெசவு செய்தல் போன்ற செயல்பாடுகள் முறையே நிகழும்.

இவ்வாறு ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் செய்யும் தொழிலாக கைத்தறி நெசவுத்தொழில் இருக்க, விசைத்தறி நெசவுத்தொழில் பல குடும்பத்து உறுப்பினர்கள் செய்யும் தொழிலாக இன்று மாறியுள்ளது. நூலிழைத்தல் ஒரு குடும்பத்தவராகவும், பாவு சுற்றுதல் ஒரு குடும்பத்தவராகவும், நூலிற்குப் பசை போடுதல் ஒரு குடும்பத்தவராகவும், தறியில் பிணைப்பவர் வேறொருவராகவும், தார் சுற்றுவர் ஒரு குடும்பத்தவராகவும், நெசவு செய்பவர்கள் வெவ்வேறு குடும்பத்தவர்களாகவும் இருப்பர்.  கைத்தறி நெசவுத் தொழிலின் துணைத் தொழில்களைப் பெரும்பாலும் ஒரே குடும்பத்தார் மேற்கொள்வர்.  ஆனால், விசைத்தறியின் துணைத்தொழில்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடும்பத்தார் மேற்கொள்கின்றனர்.  

 

இதனால், தறிபுகு விழா கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு நூலிற்கு வண்ணம் போடுதல், பாவுக்குப் பசை போடுதல், பாவு தறியில் பிணைத்தல், நெசவு செய்தல் போன்றவற்றைத் தேவைக்கு ஏற்ப கொண்டாடுகின்றனர்.  ஆனால், விசைத்தறியின் துணைத்தொழில்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடும்பத்தார் தனித்தனியே மேற்கொள்வதால் ஊரார் குறிப்பிடும் அதே நாளில் எல்லோரும் ஒன்றாக முன்னர் குறிப்பிட்ட முறைப்படி தறிபுகு விழா கொண்டாடுகின்றனர்.

 

இவ்வாறு கால மாறுபாட்டின் காரணமாக கைத்தறி நெசவானது விசைத்தறி நெசவாக மாறியபோது அதற்கு எடுக்கும் விழாவின் தன்மையும் காலவோட்டத்தில் மாறுபட்டிருப்பதை உணரலாம்.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி