வேளான் பள்ளி
தாதன்கோட்டையிலிருந்து அடுத்ததாக வந்தடைந்த
இடம் ஓர் குக்கிராமம். திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில்
நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலதுப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
பெரும்புள்ளி என்னும் ஓர் சிறிய கிராமம்.
அங்குள்ள கன்னிமார் கோவிலுக்கு செல்லும்
வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த
நிலையில் கல்வெட்டுகளை தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு
பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.
நடுகல் கல்வெட்டு :
1.ஸ்ரீ அரையரெள்
2 ளி கோய்த்திர
3 னான மதுரா
4 ந்தகப் பள்
5 ளி வேளான் ப
6 ள்ளி நாட்டு நி
7 ரை போகயில்
8.பட்டான்
செய்தி :
பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து
சென்ற போது அரையரெள்ளி கோய்த்திரனான மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன்
சண்டையிட்டு இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது.
அதனையடுத்த கன்னிமார் கோவிலின் அருகேயுள்ள
பாறையில் அழகிய முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான ஒன்பதாம் நூற்றாண்டு தமிழ்
கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
பாறை கல்வெட்டு :
1.ஶ்ரீ குழும்புரேற்றுக்குப்பட்டுக்கா … த
2.பள்ளி வேளான் மகன் இடவை யா
3.முற்றுவித்த பராந்தகப் பள்ளி வேளானவன் …
4.ழிஞத்து மிடவையுந் திருக்குடமூக்கிலு
மஹாராஜ..
5.ச்சடைய மாறற்குப் பணி பலவுஞ் செய்து …
6.ற்றுவித்த அண்ட வேளான் குறும்பராதித்தன்..
7.ள்ளன.னவன் மகன் ஸிம்ஹள ராஜ.. ளை எல்
8.லாஞ் செய் …. ம் ஸால
க்ராமத்.. அயி
9.ராவணமெ … ஹா
மதங்கஜத்தீண்டிப்படு
10.த்த வரகுண …. னுக்கு
நவாதசகஜங் கொண்டு
11.சென்று செந்நி…. க்
காட்டிக்குடுத்துப் பணிபல
12.வுஞ் செய்து கு.. னென்னு…. தொடு ஸந்மாந
13.ஸற்காரம் பெற்று பியர் ந…. மபாகுவாந ப
14.ள்ளி வேளான க்கம் புள்ளன் றனக்குந் தன் மக
15.னுக்கும் ஜாத … செந்நாடந்
திருமலைக் கூத்த
16.னுந் த …. மிருந்தட்டின … வெள்
17.ளறய… குளமிதன் கீழ் நீர்
18.போந்து விளைந்த….
செய்தி :
இக்கல்வெட்டு எட்டாம் ஒன்பதாம்
நூற்றாண்டுகளில் முற்காலப் பாண்டியர்களுக்கு கட்டுப்பட்டு பெரும்பள்ளி என்னும்
இன்றைய பெரும்புள்ளி பகுதியை ஆட்சி செய்த ஒரே குடும்பத்தின் நான்கு
தலைமுறைகளை பற்றி குறிப்பிடுகிறது. இவர்கள் குறுநில மன்னர்களாக இருந்து போர்
காலங்களில் பாண்டியர்களுக்கு தளபதிகளாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தவர்கள்
என்பது கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.
1.பள்ளி வேளான்
2.பராந்தகப் பள்ளி வேளான் 3.குறும்பராதித்தன்
நக்கன் புள்ளன்
4.புள்ளன் நக்கன்
கல்வெட்டில் குறிப்பிடப்படும் பாண்டிய
மன்னர்கள் :
1.ஶ்ரீமாறன் ஶ்ரீ வல்லபன்
2.இரண்டாம் வரகுணன்
1.பள்ளி வேளான் - முதலில் குறிப்பிடப்படும்
பள்ளி வேளான் குழும்பூர்ப் போரில் இறந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். பராந்தக
நெடுஞ்சடையனின் வேள்விக்குடிச் செப்பேடு அவனது தந்தையான முதல் இராஜசிம்மப்
பாண்டியன்(பொது யுகம் 730-768) பல்லவர்களுக்கெதிராக குழும்பூர்
எனுமிடத்தில் நடந்த போரில் வென்றதைக் குறிப்பிடுகிறது.
2.பராந்தக பள்ளி வேளான் - பள்ளி வேளான்
மகனான
பராந்தகப் பள்ளி வேளான் இடவைப் போரை முற்றுவித்தவன். இடவைப் போர் முதலாம்
வரகுணனால் சோழ நாட்டின் மீது நிகழ்த்தப் பெற்றது என்பதை பராந்தக நெடுஞ்சடையனது
இராமநாதபுரம் கல்வெட்டு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
3.குறும்பராதித்தன் நக்கன் புள்ளன் - பராந்தக
பள்ளி வேளானின் மகனான குறும்பராதித்தன் நக்கன் புள்ளன் விழிஞம், இடவை, குடமூக்குப்
போர்களில் சடைய மாறனோடு பங்கு பெற்றவன். பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்
செப்பேடு ஶ்ரீ மாறன் ஶ்ரீ வல்லபன்(பொது யுகம் 815-862) விழிஞத்தில்
சேரனைக் கொன்றதைக் குறிப்பிடுகிறது. மேலும் ஶ்ரீ வல்லபன் சேரர், சோழர், கூபகர் மற்றும்
வடநாட்டவரை குடந்தைப் போரில் வென்றதையும் குறிப்பிடுகிறது. சின்னமனூர் பெரிய
செப்பேடு ஶ்ரீ வல்லபன் குடமூக்கில் பல்லவ, சோழ, கலிங்க, மாகதர்களை வென்ற நிகழ்வு
குறிப்பிடப்பட்டுள்ளது.
4.புள்ளன் நக்கன் - குறும்பராதித்தன் நக்கன்
புள்ளனின் மகன் புள்ளன் நக்கன் இரண்டாம் வரகுணன் சிங்கள அரசனோடு சாலக்கிராமம்(
இராமநாதபுரம் மாவட்டம் ) எனுமிடத்தில் செய்த போரில் அயிராவணம் எனும் யானையால்
தாக்கப்பட்டான். அப்போது இவன் பத்தொன்பது யானைகளைக் கொண்டு அவனைக் காத்தான்.
செந்நிலப் போரில் பங்கு பெற்றான். தளவாய்புரச் செப்பேடு பராந்தக வீரநாராயணன்
செந்நிலப் போரில் தனது முன் பிறந்த அண்ணனை வென்ற நிகழ்வு குறிப்பிடப்பட்டள்ளது.
ஶ்ரீ வல்லபனின் இறுதிக் காலத்தே இலங்கைப்
படையின் உதவியுடன் மாயா பாண்டியன் அரசனானான். வரகுணன் சிங்களப் படையையும் மாயா
பாண்டியனையும் வென்று அரசனானதை பாண்டிய குலோதயம் குறிப்பிடுகிறது.
இந்த புள்ளன் நக்கனும் அவனது மகனும் நிலம்
தானமாக வழங்கியதை கல்வெட்டின் இறுதிப் பகுதிக் குறிப்பிடுகிறது. மிகவும்
சிறப்புமிக்க கல்வெட்டுகளுள் ஒன்றுங்க இது.
அதனையடுத்து சாலையை கடந்து வந்தால் கரையோரமாக
உள்ள ஆலமரத்தின் கீழே சப்தகன்னியர் சிற்பமும், தவ்வை சிற்பமும்
உள்ளதுங்க. வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள் மக்களே.
நன்றி குமரவேல் அண்ணா, பொன்
கார்த்திகேயன், ரவிச்சந்திரன் அண்ணா, திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு,
கூகுள்
மற்றும் Select Inscriptions of Tamilnadu.
பெரும்புள்ளி நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள்
| பத்தாம் நூற்றாண்டு நடுகல் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டு
பாறை கல்வெட்டு | பெரும்புள்ளி | திண்டுக்கல் மாவட்டம் | தமிழ்நாடு
PERUMBULLI HEROSTONES AND INSCRIPTIONS |
10TH CENTURY HEROSTONES AND 9TH CENTURY ROCK INSCRIPTION | PERUMBULLI |
DINDIGUL DIST | TAMILNADU
Comments
Post a Comment