கல்வெட்டில் ‘புடவை’

 கல்வெட்டு செப்பேட்டில் ‘புடவை’



உலக புடவை தினம் 2022: 

    உலக சேலை தினம் என்பது இந்த பாரம்பரிய உடையின் அழகை நினைவுகூரும் மற்றும் சிறப்பித்துக் காட்டும் ஒரு முயற்சியாகும். இது ஆண்டுதோறும் டிசம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஒன்பது முற்றத்தின் அதிசயம்- புடவை என்பது காலங்காலமாக கடந்து வந்த இந்திய கைவினைத்திறனின் மிக நேர்த்தியான, அழகான மற்றும் அழகான பரிசுகளில் ஒன்றாகும்.

ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது.

முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் இந்தத் துறைமுகங்களிலிருந்து  புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய்புடவை, பரும்புடவை, பட்டு, நூல் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது. 

திருமலை – திருப்பதி நிகழ்வுகளில் “திருப்பாவாடை“ விழா என்ற ஒரு நிகழ்விற்காக நிறைய தானம் தரப்பட்டுள்ளது.” திருப்பாவாடை “ , என்பது இறைவன் முன் ஒரு புடவை விரித்து, அதில் வித விதமான பிரசாதங்களை பரப்பி வைத்து செய்யும் பூஜை ஆகும்.

பதினைந்தாம் நூற்றாண்டில், அச்சுதராயாரின் கல்வெட்டுகளில் திருப்பாவாடை செய்ய, ஒருவர் இரண்டாயிரம் பணம் கொடுத்ததாக கல்வெட்டு உள்ளது. 

(ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.)

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் உள்ள சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,  திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு திருப்பதிகம் பாடிய, பிறவியிலேயே பார்வையற்ற பதினாறு பேருக்கும் உணவுக்காக அளிக்கப்பட்ட நெல்லின் அளவு கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு, ஆள் ஒன்றுக்கு ‘பதக்கு’ நெல் வீதம் பதினெட்டு பேர்களுக்கு (பார்வையற்ற பதினாறு பேர் மற்றும் அவர்களுக்கு ‘கண் காட்டுவார்’ என்று சொல்லப்படும் வழிகாட்டிகள் இருவர்) உணவுக்காக அளிக்கப்பட்ட நெல், முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கும் மொத்தமாக ஆயிரத்து எண்பது கலம் நெல் அளிக்கப்பட்ட விவரம் அக்கல்
வெட்டில் அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளது.

(ஒரு பதக்கு என்பது இரண்டு மரக்கால், பன்னிரண்டு மரக்கால் என்பது ஒரு கலம் என்ற அளவை அக்காலத்தில் இருந்தது.) இதுதவிர இவர்களுக்கு ஆடைகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் நாம் அறிய முடிகிறது. இதைப் ‘புடவை முதல்’ என்று கல்வெட்டு குறிக்கிறது. ‘புடவை முதல்’ என்பது திருப்பதிகம் பாடுபவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் கட்டிக்கொள்ளும் துணிக்காகக் கொடுத்ததைக் குறிக்கின்றது. 

‘புடவை’ என்ற சொல் துணி அல்லது ஆடை என்ற பொருளில் வழங்கி வந்திருக்கிறது. இதைச் சிதம்பரத்தில் உள்ள ‘ஆடவல்லப் பெருமான்’ கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திரனின் 24ம் ஆட்சியாண்டு (கி.பி.11ம் நூற்றாண்டு) கல்வெட்டு குறிக்கின்றது. இதே பொருளில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் ‘புடவை’ என்ற சொல் வழங்கி வந்திருக்கின்றது. 

மதுராந்தகன் என்னும் பெயர்கொண்ட உத்தம சோழன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் வழிபாட்டுக்கு வழங்கிய நிவந்தமே ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகள்.

தற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. 

ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம் நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்; வடமொழி.  மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில் சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின் மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.

உத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு வெளியிடப்பட்டது.

முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.

பாடம்:

37  ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி
38  வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி
    அறுநாழியு 
39  ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது
    நிசதம்
40  உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று
    ஸந்திக்கும் (த)
41  யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று
    ஸந்திக்கு
42  நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்
43  வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்
44  ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி
    ஒருவனுக்கு
45  நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்
46  கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு
47  க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம்
    உ(ழ)ப்
48  பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு
    பொன்
இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.

பாடம்:

49  கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய்
    காலா
50  க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு
51  க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு
52  பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ
53  ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்
54  சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்
55  றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கை
56  மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி
57  ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல்
    விலை  கொ
58  ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு
59  ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச
60  சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்

செப்பேடு கூறும் செய்திகள்

உயர் அதிகாரியின் விண்ணப்பம்

 உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது, மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன் கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது. 

உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக் கச்சேரி என்னும் ஊரிலும் நிலங்கள் இருந்துள்ளன. 

இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன. விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. 

விளைச்சல், பூ என்றும் போகம் என்றும் வழக்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம் விண்ணப்பம் செய்கிறான்.

கோயிலின் வருவாய்

கோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது (செப்பேட்டில்) “கால் அளவு கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  முகத்தல் அளவைக்கு ‘கால்’ என்னும் கருவி பயன்பட்டது. ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால் இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான் கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும் இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது. 

இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும் நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். 

“நீயேய் நிவந்தம் செய்வீய்” என்று மன்னன், நிவந்தப் பொறுப்புகளை இந்த அதிகரியிடமே ஒப்படைக்கிறான்.  

இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன), நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை  சிறப்புச்செய்திகள்.

நிவந்தத்தின் விளக்கம்

கோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும் (கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு நிவந்தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

திருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு நெல் வழங்கப்பட்டது. 

திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல் கொடுக்கப்பட்டது.

வேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது. 

திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.

சங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை,  திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை, திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.                                             

-------------------------------------------------------------------------------------------------------------
ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்”  என்னும் தலைப்பிட்ட நூலின் அட்டைப் பகுதியில் இரண்டு ஒளிப்படங்கள்
செப்பேட்டின் முழுமையான தகவல்களுக்கு http://kongukalvettuaayvu.blogspot.com/2018/11/blog-post.html 


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு