சாக்கைக் கூத்து
தமிழகத்தின் தொன்மையான கூத்துக் கலை.இன்றைக்கு கதகளி என்று மலையாளத்தவரிடம் உயிர்ப்புடன் உள்ளது.
சோழர்களைப் பெரிதும் ஈர்த்தது.அதுவும் இராசேந்திரனை சற்று கூடுதலாகவே ஈர்த்திருக்கிறது.
சோழ அரசின் உயர்பதவியான மாராயன் எனும் பட்டமே கொடுத்திருக்கின்றனர் என்பதை இராசேந்திரனின் காமரசவல்லிக் கல்வெட்டில் குறிக்கப்படும் "சாக்கை மாராயன் விக்கிரமசோழனுக்கு.," எனும் சொற்றொடறிலிருந்து விளங்கிக் கொள்ளமுடிகிறது.சோழபுரம் மானம்பாடிக் கொல்வெட்டில் கூடச்செய்தி உண்டு.
கல்வெட்டில் இக்கூத்துபற்றிய உத்தமச்சோழன் (கி.பி.979)காலத்திய கீழப்பழூர் திரு ஆலந்துறையார்க் கல்வெட்டே மிகப் பழமையான குறிப்பாக பேரா.இல.தியாகராசன் கருதுகிறார்.
இலக்கியத்தில் சிலம்பே சாட்சி.
சேரன் அவையில் சாக்கையன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக் காட்டினான். சிவபெருமான் உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து 'கொட்டிச் சேதம்' ஆகும். சாக்கையன் இக்கூத்தினை ஆடிய போது அவன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஓசையிட்டது; கையில் இருந்த பறை ஆர்த்தது; அவனுடைய கண்கள் சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை கூத்தின் அசைவால் நாற்திசைகளிலும் அசைந்தாடியது. ஆனால், இடப்பாகம் இருந்த உமையின் 'பாடகம்' என்ற காலணி அசையவில்லை; 'சூடகம்' துளங்கவில்லை; 'மேகலை' ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை; அவளது 'குழை' என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. திரிபுரம் எரித்தபின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தினை மேற்சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான்.
இதனை
திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவுஞ்செங்க ணாயிரத் திருக்குறிப்பு அருளவுஞ்செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்பாடகம் பதையாது சூடகந் துளங்காதுமேகலை ஒலியாது மென்முலை அசையாதுவார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாதுஉமையவள் ஒருதிற னாக, ஓங்கியஇமையவ னாடிய கொட்டிச் சேதம்
சிலம்பின் படல் சொல்லும்.
சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
"பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்
இந்தக் கூத்தின் ஈர்ப்பால் தான் இராசேந்திரன் கங்கைகொண்டசோழீஸ்வரத்தில் உயிரொழுகும் உமையொருபாகனை வடித்திருக்கிறான். மாராயன் பட்டம் கொடுத்து சாக்கையை ஆடியவரை உயர்த்தியிருக்கிறான்.
கலைவாணன் அல்லவா?
Comments
Post a Comment