தமிழகக் கோயில்களில் ப்ராபாகர மீமாம்ஸை
வேதத்தின் பொருளை விளக்கும் முறைகளைக் கொண்ட மெய்யியல் துறைக்கு மீமாம்ஸை என்று பெயர். இந்தத் துறை குமாரிலபட்டர் மற்றும் அவருடைய மாணவரான ப்ரபாகர மிச்ரர் ஆகியோரின் பெயரால் இரு பெரும் கிளைகளைக் கொண்டது. அவர்களின் பெயரால் பாட்டமீமாம்ஸை என்றும் ப்ராபாகர மீமாம்ஸை என்றும் பெயர் பெற்றது. இவற்றுள் இடைக்கால தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலும் வேதங்களோடு ப்ராபாகர மீமாம்ஸை போதிக்கப் பெற்றது.
ந்ருபதுங்க பல்லவனின் காலத்தில் பாகூர் வித்யாஸ்தானமாகவே திகழ்ந்தது. இந்த வித்யாஸ்தானத்தில் வேத வேதாங்கங்களோடு மீமாம்ஸையும் போதிக்கப் பெற்றது.
கும்பகோணத்தில் உள்ள நாகேச்வரன் கோயிலில் முதலாம் பராந்தகனின் காலத்தில் ப்ராபாகர மீமாம்ஸை கற்பிக்க ஆசிரியருக்கு பட்டவ்ருத்தி வழங்கிய செய்தி கல்வெட்டில் அமைந்துள்ளது.
திருகோஷ்டியூரிலுள்ள பைரவர் கோயிலில் முதலாம் ராஜராஜனின் காலத்தில் ப்ராபாகர மீமாம்ஸை கற்பிக்க கொடை வழங்கப்பட்டது.
எண்ணாயிரத்திலுள்ள நரஸிம்ஹர் ஆலயத்தில் முதலாம் ராஜேந்த்ரன் காலத்தில் ப்ராபாகர மீமாம்ஸை கற்க 35 மாணவர்கள் இருந்தமையும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருகலம் நெல்லும் ஒரு அத்யாயம் கற்று முடிக்கும் போது ஒரு கழஞ்சு பொன்னும் வழங்கப்பெற்றன. கற்பிப்பவருக்கு தினமும் ஒருகுறுணி இரண்டு நாழி நெல்லும் மாணவருக்கு அரை கழஞ்சாக பதினேழரை கழஞ்சும் வழங்கப்பெற்றன. இவர்கள் அபூர்வமாக அதாவது முதன்முறை கற்கும்போது மட்டுமே இது வழங்கப்பட்டது.
இவை தவிர வேதசாஸ்த்ரங்களைக் கற்பிக்கும் இடங்கள் திருமுக்கூடல், ஆடுதுறை, திருபுவனி முதலிய பல்வேறு கோயில்களில் அமைந்திருந்தன. சோழமாதேவி, எண்ணாயிரம் மற்றும் திருவிடைக்கழி கோயில்களில் வேதாந்தம் போதிக்கப்பெற்றது. கொடை பெற்று இதுவரை கிடைக்கும் கல்வெட்டு சான்றுகள் இவ்வளவு. இன்னமும் சான்று பெறாமல் போதிக்கப்பெற்றவை பலவாகலாம்
பாட்ட மீமாம்ஸை தமிழகத்தில் எங்கும் இடம்பெறவில்லை. ப்ராபாகர மீமாம்ஸை மட்டுமே போதிக்கப்பெற்றது. ப்ரபாகரர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ReplyForward |
Comments
Post a Comment