ஆதிச்சநல்லூர் பானையோட்டின் நெய்தல் நிலக்காட்சி

 

ஆதிச்சநல்லூர் பானையோட்டின் நெய்தல் நிலக்காட்சி



தேமொழி



Jan 28, 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் (புவியிடக்குறிப்பு: 8°37’47.6”N 77°52’34.9”E) பகுதியில் செய்யப்பட்ட அகழாய்வில் பெருங்கற்காலத்து (இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்கக் காலத்து) நாகரிக தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. இவை இன்றிலிருந்து 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது (அதாவது, பொ.ஆ. முன் 1500லிருந்து பொ.ஆ 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது) என அறிவியல் வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluniscence dating) சோதனை வழியாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கு முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், பானையோடுகள், தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைக்கப் பெற்றன. குறிப்பாக உலோகத்தால் ஆன சிறிய தாய் தெய்வ உருவம் ஒன்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கருப்பு-சிவப்பு, சிவப்பு, கருப்பு வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரின் ஈமக்காட்டுப் பகுதியில் 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழாய்வில் புடைப்பு உருவங்கள் உள்ள பானையோடு ஒன்றும் கிடைத்துள்ளது.

அகழாய்வுக் குழியில் 2 மண்டை ஓடுகளுடன் கிடைத்த (54ஆம் எண்) ஈமத்தாழியில் மண் நிரம்பிய பகுதியை நீக்கிய பின்னர், உள்ளே இரும்பு உளி ஒன்றும், புடைப்பு உருவங்கள் கொண்ட உடைந்த பானையோடும் கிடைத்துள்ளது. அதில் முழங்காலுக்கும் கீழே தொங்கும் மெல்லிய நீண்ட ஆடை அணிந்து, மார்புகளும் முகமும் உருண்டையாகத் தெரியும் வண்ணம் அமைக்கப்பெற்று, நீண்ட கைகள் கொண்டதாகக் காட்டப்பட்ட பெண்ணின் உருவம் கயிறு போன்ற கோடுகளால் பதிக்கப்பட்டுள்ளது. அவளின் இடது பக்கம் நீண்ட கொம்பு கொண்ட மானும், காலுக்கு அருகில் முதலையும், அவளுக்கு வலப்பக்கம் ஒரு தாவரமும் அதன் மேல் மீனை வாயில் கவ்விய பறவை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஈமக்காட்டுத் தடயம் ஒன்று இதுவரை தமிழகப் பகுதியில்  கிடைத்திராததால் இது ஒரு சிறப்பான தொல்தடயம் என்றும் கருதப்படுகிறது. இதன் காலம் கி. மு. 700 ஆக இருக்கலாம் என்றும், இதில் காட்டப்படும் உருவங்கள் ஈரோடு, தர்மபுரி பகுதிகளின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் குகை ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் போலவும் அமைந்துள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மற்றொரு தொல்லியல் தடயமான, இன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருக்கும் கையளவு உள்ள வெண்கல பெண்ணுருவச் சிற்பத்தில் காட்டப்படும் பெண்ணின் தோற்றத்தை பானையோட்டில் உள்ள பெண்ணுருவம் ஒத்திருக்கிறது எனலாம். இந்த உருவம் தாய் தெய்வத்தைக் குறிக்கிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், குறிப்பாகக் கொற்றவையின் முந்தைய வடிவம் என்றும் கருதுகிறார்கள்.

முந்து கொற்றவை:

ஆதிச்சநல்லூர் பானையோட்டில் இருக்கும் பெண்ணுருவத்தை விரிவாக விளக்கும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சு. இராசவேலு அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்:

“இம்மட்கலவோடு பல்வேறு வகைகளில் சிறப்புக்குரியது. இவ்வோட்டின் மேல்பகுதியில் கைகளால் வனையப்பட்டு சிறிய குச்சியால் அழகுபடுத்த புடைப்பான கோடுகள் கொண்ட திரளான ஒரு தாய்த்தெய்வத்தின் உருவம் காணப்படுகிறது. அலெக்சாந்தர் ரீ அகழாய்வில் கிடைத்த தாய்த்தெய்வம் போன்று முக அமைப்புடன் இத்தெய்வம் விளங்கினாலும் இவ்வுருவத்தின் தலை அலங்காரம் பல்வேறு புள்ளிகள் கொண்டு விரிந்த சடைமுடியாக காட்சியளிக்கிறது. தலை அலங்காரம் புள்ளிகளால் இடப்பட்டுள்ளமை மிக நேர்த்தியான உள்ளூர் கைவினைஞரால் வடிவமைக்கப்பட்ட தெய்வமாக இது காணப்படுகிறது. நின்ற நிலையில் இருக்கும் இத்தெய்வம் முழங்கால் வரை நீண்ட அங்கியை கொண்டு விளங்குகிறது. இரு நீண்ட கைகளை தொங்க விட்ட நிலையில்  கைகளில் எதையோ வைத்துள்ள நிலையில் இத்தெய்வம் உள்ளது. முகத்தின் அமைப்பு செப்புப் படிவ தாய்த்தெய்வத்தின் உருவத்தையே ஒத்துள்ளது. வட்ட வடிவ முகம் கண்கள் மூக்கமைப்பு காட்டப்படாத நிலையில் இத்தெய்வம் உள்ளது. இத்தெய்வத்தின் உடல் அமைப்பு நன்கு களிமண்ணைக்கொண்டு மெலிதான மேட்டுக் கோடாக இடப்பட்டு இடைவெளிகளில் குச்சி ஒன்றைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தோள்பகுதி விரிந்து இடுப்புப் பகுதியில் குறுகி மீண்டும் கீழ்பகுதி விரிந்து தொப்புள் அருகில் குறுகிச் சென்று மீண்டும் விரிவடைந்த நிலையில் கால்களை அகல விரித்து காட்டப்பட்டுள்ளது.

தாய்த்தெய்வத்தின் மார்பு உருண்டையாக களிமண்ணை வைத்து தனியாக சேர்த்துள்ள நிலையில் காணப்படுகின்றன. இத்தெய்வத்தின் கைகளும் கீழே இடைப்பகுதியில் சற்று வளைந்து தொங்கவிட்டவாறு உள்ளது. கைகளை அகல விரித்த நிலையில் இத்தெய்வம் உள்ளது. தாய்த்தெய்வத்தின் வலப்பக்கம் வளமையான நெற்கதிரின் செடி காட்டப்பட்டுள்ளது, பல இதழ்களை உடைய இக்கதிரின் ஒரு இலைப்பகுதியின் மேல் நீர்ப்பறவை ஒன்று அமர்ந்துள்ளது. அப்பறவையின் மூக்கில் மீன் ஒன்று புள்ளிகளாக காட்டப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் இடப்பக்கத்தில் அழகிய மான் ஒன்று உள்ளது. அதன் கீழே முதலை ஒன்றும் முதலைக்கு கீழ் நிலையில் வட்டவடிவ ஆமை ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. நீர்ப்பறவை, முதலை, ஆமை, மீன் ஆகியவையும் நெற்கதிரும் இத்தாய்த்தெய்வம் தமிழர்களின் வளமைக்கடவுளாக இருத்தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. இவ்வனைத்து அமைப்புகளும் மட்கலத்தின் மீது களிமண்ணைக்கொண்டு கோடு போல் உருவாக்கி இணைத்தபின் அக்கோட்டினை குச்சியின் துணையுடன் இடைவெளி விட்டு பள்ளமாக்கி புடைப்பாக அழகு நயத்துடன் ஆதிச்சநல்லூர் கைவினைஞர் படைத்துள்ள பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.

மான் இருப்பதும், வளமைக்கான ஆமை, மீன், நெற்கதிர் அமைப்பும் இத்தாய்த்தெய்வம் முந்து கொற்றவையாகத் தமிழர்களின் தெய்வமாக ஆதிச்சநல்லூர் மக்களால் வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். இத்தெய்வத்தை வணங்கிய குடும்பத்தில் இறந்தவர் ஒருவரின் முதுமக்கள் தாழிக்கருகில் இவ்வுருவத்தை செய்து படையல் பொருளாக வைத்து உள்ளனர்” என்கிறார் முனைவர் சு. இராசவேலு.

தொல்லியல் துறையின் ஆங்கில அறிக்கை முதலையை அலிகேட்டர் என்று குறிப்பிடுகிறது. அத்துடன், இந்த அறிக்கையின் விளக்கத்தில் ஆமை பற்றிய குறிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.

நோக்கம்:

இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்ற வழக்கால், தொல்லியல் தடயங்களைச் சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு பழந்தமிழர் பண்பாட்டை, அவர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் முயற்சி தொடர்ந்து வருகிறது. பழந்தமிழர் வாழ்விடங்களின் கட்டுமானங்கள், நீர் வடிகால் அமைப்புகள், இரும்பு உலைகள், வணிக நடவடிக்கைகள், ஏற்றுமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த மணி வகைகள், கடல் கடந்த வணிகத்திற்குச் சான்றாகக் கிடைக்கும் ரோமப் பேரரசின் நாணயங்கள், வணிகப் பொருட்கள், அம்போரா மதுக் குடுவைகள் எனப் பல தொல்லியல் தடயங்களுக்கு, மிக நுணுக்கமாகப் பழந்தமிழர் வாழ்வுமுறையைப் பதிவு செய்யப்பட்ட சங்கப் பாடல்களின் வரிகளில் நமக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே, பானையோட்டில் காட்டப்படும் பறவை, தாவரம், மான், முதலை, பெண் ஆகிய உருவங்களைக் குறிக்கக்கூடிய தரவுகள் சங்கப் பாடல் வரிகளில் கிடைக்கின்றதா சான்றுகள் தேடும் முயற்சியே இக்கட்டுரை.

கொக்கு:

கடற்கரையோரம் உள்ள தாழை மரத்தின் மடலில் கொக்கு அமர்ந்திருக்கும் காட்சி நெய்தல் நிலக் காட்சியாக பல சங்கப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

இவ்வாறு அமர்ந்திருக்கும் கொக்கின் தோற்றம் ‘கரும் கால் வெண் குருகு’ என்று புலவர்களால் விவரிக்கப்படுகிறது. கரும் கால் வெண் குருகு என்றால் கருமையான கால்களையும் வெண்மை நிறத்தையும் கொண்ட கொக்கு இனம், இது ‘லிட்டில் எக்ரெட்’ (The little egret) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும். இதன் உயிரியல் பெயர் ‘எக்ரெட்டா கார்செட்டா’ (Egretta garzetta) என்பதாகும்.

குறுந்தொகையில் அம்மூவனார் பாடிய நெய்தற் திணைப் பாடல் ஒன்றில் உப்பங்கழியில் இரை தேடி உண்ட கரிய காலையுடைய வெள்ளைக் கொக்கு பின் கரையில் உள்ள தாழையில் அமர்ந்து அலைகடலின் ஓசையைக் கேட்டுத் தூங்கும் என்ற காட்சி பின்வருமாறு கூறப்படுகிறது.

     கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண் குருகு

     அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்

     உடை திரை ஒலியின் துஞ்சும் …

[குறுந்தொகை, நெய்தற் திணைப் பாடல் — 303, அம்மூவனார், தோழி தலைவனிடம் சொன்னது]

கரும் கால் வெண் குருகு என்ற குறிப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் (நற்றிணை நெய்தற் திணைப் பாடல்கள்: 4, 54, 67; குறுந்தொகை நெய்தற் திணைப் பாடல் — 325) இடம் பெறுகின்றது. அத்துடன் தாழையும் அதில் தங்கும் குருகும் குறித்த காட்சியானது நற்றிணையின் நெய்தற் திணைப் பாடல் ஒன்றிலும் இடம் பெறுகிறது.

      திரை முதிர் அரைய தடம் தாள் தாழை

     சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய

     இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும்

     [நற்றிணை, நெய்தற் திணைப் பாடல் — 131, உலோச்சனார்]

என்ற நற்றிணைப் பாடலில், சங்க இலக்கியங்களில் பல நெய்தல் திணைப் பாடல்களை எழுதிய புலவர் உலோச்சனார் கொக்கு தாழை மரத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை, கடலின் பெரிய அலைகள் பல வந்து மோதும் அகன்ற அடிப்பகுதியையுடைய தாழை மரத்தின், சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட மடல்கள் வளையும் வண்ணம் இறால் மீனை உண்ணும் கொக்கு கூட்டம் தங்கியிருக்கும் என நயம்பட விவரிக்கிறார். கடற்பறவை கொக்காக இல்லாமல் நாரையாக இருக்கவும் வாய்ப்புண்டு.

தாழை:


“வீழ் ‘தாழ்’ தாழை பூ கமழ் கானல்” (நற்றிணை, நெய்தற் திணைப் பாடல் —78, கீரங்கீரனார்) என்று விழுது ஊன்றிய தாழையின் மலர்கள் கமழ்கின்ற கடற்கரைச் சோலைகளை சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. நறுமணமிக்கத் தாழை மரங்கள் விழுதுகள் கொண்ட அடர்த்தியான அடிப்புறத்தைக் கொண்டவை என்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுவதுண்டு. மாறாக, தாழை என்று தென்னை மரங்களும் குறிப்பிடப்படுவதுண்டு, தெளிவுபடுத்தும் நோக்கில் வீழ் ‘இல்’ தாழை, அதாவது விழுதில்லாத தாழையாகிய தென்னை என்ற குறிப்பும் (பெரும்பாணாற்றுப்படை — 357) காணப்படுகிறது. மணமிக்கத் தாழம்பூ பூக்கும் குறுமரமான தாழையை ‘கைதை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தென்னிந்தியப் பகுதியில் ஆறு அல்லது ஏழு வகை தாழை இனங்கள் இருப்பதாக அடையாளம் காணப்படுகிறது. இவை ‘பண்டானஸ்’ (Pandanus) என்றும், ஆங்கிலத்தில் பொது வழக்கில் Fragrant Screwpine என்றும் குறிப்பிடப்படுகிறது. தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் செந்தாழம்பூ, வெண்தாழம்பூ என இருவகை நிறங்களில் தாழம்பூக்கள் கொண்ட மரங்கள் வளர்கின்றன. இவற்றில் ஆண்பூக்களின் மடல்கள் நறுமணம் கொண்டவை. இரண்டு வகையின் மலரின் மணத்திலும் வேறுபாடு இல்லை.

செந்தாழம்பூ மஞ்சள் நிறத்தில் பொன்னிறம் கலந்த தோற்றத்தில் இருக்கும். இவை Pandanus odorifer அல்லது Pandanus odoratissimus என்று அழைக்கப்படுகிறது. மாசி, பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ பூக்கிறது.

வெண்தாழம்பூவின் மடல்கள் வெண்மையானவை, இவை Pandanus fascicularis அல்லது Pandanus tectorius என்று அழைக்கப்படுகிறது. ஆடி, ஆவணி மாதங்களில் வெண்தாழம்பூ பூக்கிறது. சங்க இலக்கியங்களில் அதிகம் இடம் பெறும் தாழம்பூ வெண்தாழம்பூவே.  தாழை வெண்பூக் குருகு என மலரும் (குறுந்தொகை — 226) என்று, வெண்தாழம்பூவின் மடல்கள் விரிவது தாழை மரத்தில் அமர்ந்துள்ள வெண் கொக்கு தன் சிறகை விரிப்பது போன்ற தோற்றத்தில் இருக்கும் என்றும் ஒரு சங்கப்பாடல் கூறுகிறது.

      வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,

     குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்

     கானல் …

[குறுந்தொகை, நெய்தற் திணைப் பாடல் — 228, செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]

விழுதுகள் தொங்கும் தாழையின் மலரும் நிலையிலுள்ள செழுமையான மொட்டு கொக்குகள் தம் சிறகைக் கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழுமாம்.

மற்றொரு பாடல்,

     நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை

     பூ மலர்ந்தவை போல புள் அல்கும்

          [கலித்தொகை — 133]

நீர் நிறைந்த கமண்டலம் போல பழங்கள் தொங்கும் வளைந்த தாழையின் பூக்கள் மலர்ந்தவை போல் பறவை அந்தத் தாழை மேல் தங்கியிருக்கும் என்று கலித்தொகை பாடலும் குறிக்கிறது. கடற்கரையில் அலை வந்து மோதும் பகுதியில் தாழை மரங்களையும், அவற்றில் மலரும் தாழையின் வெண்பூக்களையும், தாழையின் மேல் தங்கும் வெண் குருகுகள் வெண்தாழம்பூவினைப் போல இருப்பதாக ஒப்பிடுவதற்கு மேலும் பலபாடல்களை எடுத்துக்காட்டாகக் காட்ட இயலும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

 மரைமான்:

நெய்தற் திணைப் பாடல்களில்;

வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் [நற்றிணை, நெய்தற் திணைப் பாடல் — 111]

பின்னி வரிந்த வலையையுடைய பரதவரின் வன்மைமிக்க தொழிலையுடைய சிறுவர்கள் மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுப்பார்கள்,

மானடி யன்ன கவட்டிலை அடும்பின் [குறுந்தொகை, நெய்தற் திணைப் பாடல் —243, நம்பி குட்டுவனார்]

மானின் குளம்பைப் போன்ற பிளவுபட்ட இலைகளை உடைய நெய்தல் நிலத்தில் படரும் அடும்பின்கொடி

என்பது போன்ற பாடல் வரிகளில் கடற்கரை மான் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பானையோட்டில் காணப்படுவது, திருகிய கொம்புகள் கொண்ட மரைமான் (Antilope cervicapra) இன மான் (The Blackbuck — Antilope; also known as the Indian antelope). இவ்வகை மான்கள் வங்கக் கடலோரக் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக வேதாரண்யத்தின் அருகில் உள்ள கோடியக்கரை காடுகளில் காணப்படுகின்றன. பானையோட்டில் காட்டப்படும் பெண்ணுருவத்தை ‘கொற்றவை’ என்று அடையாளப்படுத்தும் காரணமும் இதுவே. கொற்றவையைக் குறிக்கும் சிலைகளில் அவளுடன் திருகிய கொம்புகள் கொண்ட மரைமான் காட்டப்படுவது வழக்கம்.

முதலை:

     கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை

     வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,

     இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்

     நயன் உடைமையின் வருதி;

[குறுந்தொகை, நெய்தற் திணைப் பாடல் — 324, கவைமகன், தோழி தலைவனிடம் சொன்னது]

ஆளை விழுங்கும் முதலை மேயும் ஒரு கானல் கழித்துறையில், வழியில் செல்லுபவர்களைத் தடுக்கும், வளைந்த கால்களையுடைய கொல்லுவதில் வல்ல ஆண் முதலை உலவும் கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையில், கூட்டமாக மீன்களையுடைய உப்பங்கழியில் நீந்தி இன்னல் நிறைந்த வழியாக, தலைவியைக் காண விரும்பி அன்புடன் வருகின்றாய் தலைவனே என்று தோழி தலைவனின் உயிருக்கு நேரக்கூடிய இடர் குறித்து கவலை கொண்டு கூறுகிறாள் என்று ஒரு நிகழ்ச்சி நெய்தற் திணைக் காட்சி குறுந்தொகைப் பாடலில் இடம் பெறுகின்றது.

தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படுபவை குரோக்கோடைல் (Crocodile) என்ற முதலை இனம். இவற்றில் இருவகை உண்டு. நன்னீரில் (freshwater) வாழும் சதுப்புநில முதலைகளும் (Crocodylus palustris), கடற்கரையை ஒட்டி உள்ள கழிகள் போன்ற பகுதிகளில் காணப்படும் உப்புநீரில் (marine) வாழும் முதலைகளும் (Crocodylus porosus) என இந்த இரு வகை முதலைகளை மட்டுமே தென்னிந்தியப் பகுதிகளில் காண இயலும். அலிகேட்டர் (Alligator) முதலை இனம் என்பது இந்தியாவின் முதலை இனம் அல்ல. அவை அமெரிக்கக் கண்ட பகுதியில் காணப்படும் ஒரு முதலையினம்.

எனவே, ஆதிச்சநல்லூர் தொல்லியல் தடயமான பானையோட்டில் காட்டப்படுவது நெய்தல் நிலக் காட்சி என்பதால், அதில் காட்டப்படும் முதலை குரோக்கோடைல் இனம். ஆகவே, அரசின் ஆங்கில தொல்லியல் அறிக்கை அலிகேட்டர் என்று குறிப்பிடுவது பிழையானது. ஆதிச்சநல்லூர் பானையோட்டில் காணப்படும் முதலை உருவம் கழிகளில் வாழும் உப்புநீர் முதலையைக் குறிப்பதாக இருக்கக் கூடும்.

 முடிவுரை:

     கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு

     கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்

     உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ ……. குறுந்தொகை – 303

     கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை

     வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை

     இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்

     நயன் உடைமையின் வருதி இவள் தன்

     மடன் உடைமையின் உவக்கும் யான் அது

     கவை மக நஞ்சு உண்டு ஆங்கு

     அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே ……. குறுந்தொகை – 324

என்று தலைவியை மணத்தலே இனிமேல் ஏற்புடையது என தலைவனிடம் தோழி அறிவுறுத்தும் நோக்கில் கூறுவதாக அமையும் மேற்காட்டிய இந்த இரு குறுந்தொகைப் பாடல்களையும் (303, 324) இணைத்தால், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல் பகுதியில் காணப்படும் நெய்தல் நிலக் காட்சியை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பானையோட்டில் உள்ள காட்சி சங்கப் பாடல்கள் காட்டும் நெய்தற் திணைப் பாடல் காட்சிகளுடன் பொருந்துகிறது.  குறுந்தொகை படித்த எவரும் குருகு அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்த பிறகு அது நெற்கதிரின் மேல் அமர்ந்துள்ளது எனக் கூறமாட்டார்.

பானையோட்டில், “ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் (applique) காணப்படுகின்றன” என்று தொல்லியல் துறையால் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது (பார்க்க: https://www.tagavalaatruppadai.in/excavations-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6). ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல் பகுதியில் காணப்படும் பெண் உருவத்தை கொற்றவை என்றும் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள் என்பதையும் பார்த்தோம்.

தொல்லியல் தடயங்களை ஏதேனும் வழிபாட்டுச் சடங்காக இருக்கலாம், வளமைச் சடங்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்வதால் குருகு அமர்ந்திருக்கும் தாழையை வளமைச் சடங்கைக் குறிக்கும் நெற்கதிர் என்ற முடிவுக்கு வருவது தெரிகிறது.

இரும்புக்கால தென்னிந்தியாவில் நெல் வேளாண்மை குறித்து ஆராய முற்பட்ட எல்லினார் கிங்வெல் பான்கம் (Eleanor Kingwell-Banham) குருகு அமர்ந்திருக்கும் தாழையை கரும்புப் பயிராக இருக்கலாம் (The beautiful motif identified on pottery from Adichanallur appears to represent sugarcane) என்று கருதுகிறார்.

ஆதிச்சநல்லூர் பானையோட்டின் நெய்தல் நிலக்காட்சியை மிகத் தெளிவாக விவரிக்கும் சங்கப்பாடல்கள் பல இருக்கையில் பானையோட்டில் காட்டப்படும் தாழையை நெற்கதிர் என்பதோ, முதலையை பல்லி என்பதோ அல்லது இந்தியாவிலேயே இல்லாத அலிகேட்டர் என்பதோ பிழையானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

எனவே, ஆதிச்சநல்லூர் தொல்லியல் தடயமான பானையோட்டில் உள்ள ஒட்டுப்படம் குறிப்பது, ஒரு பெண்ணுருவமும், கொக்கு அமர்ந்துள்ள தாழை மரம் ஒன்று அவளுக்கு வலப்புறத்திலும், ஆண் மரைமான் ஒன்று அவளுக்கு இடப்புறத்திலும், அவளது காலருகில் முதலை ஒன்றும் இருக்கும் காட்சி என உறுதியாகக் கூறக்கூடிய வகையில் அமைந்த நெய்தற் திணைப் பாடல் காட்சி. அந்தப் பெண் தாய்த்தெய்வமா, தாழியில் படையலாக வைக்கப்பட்டதன் காரணம் வளமைச் சடங்கைக் குறிப்பதா என்பதெல்லாம் அதைத் தங்கள் கோணத்தில் காண்பவரின் அனுமானத்தில் அடங்கும்.

சான்றாதாரங்கள்:

ஆதிச்சநல்லூர், தமிழிணையம் – தகவலாற்றுப்படை

https://www.tagavalaatruppadai.in/excavations-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6

தமிழர்களின் தாய்த்தெய்வம் – முந்து கொற்றவை, சு. இராசவேலு

http://www.kotravainews.com/history/archeology-and-history-tholliyal-varalaru-tholliyal-aaivu-in-tamil-kotravai-news/temple-sculpture-and-painting-tamil-oviyangal-kotravai-news/the-motherland-of-tamils-is-old-god-kotravai-in-kotravai-news/

குருகு

https://www.tamilvu.org/ta/library-l1210-html-l1210e08-122210

தாழை

https://www.tamilvu.org/library/l1220/html/l1220712.htm

மரை என்ற மானினம், தேமொழி, சிறகு, ஜனவரி 7, 2023

http://siragu.com/மரை-என்ற-மானினம்/

Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials – Bio Explorer.

https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

EXCAVATIONS AT ADICHCHANALLUR, Dr. SATHYABHAMA BADHREENATH, ARCHAEOLOGICAL SURVEY OF INDIA, 2021

Dry, rainfed or irrigated? Reevaluating the role and development of rice agriculture in Iron Age-Early Historic South India using archaeobotanical approaches, Archaeological and Anthropological Sciences, Dec 2019, Eleanor Kingwell-Banham

https://doi.org/10.1007/s12520-019-00795-7

மேலதிகத் தகவலுக்கு:

Motifs on urn found at Iron Age burial site, By T.S. Subramanian

THE Hindu, July 25, 2004

Unearthing a great past, by T.S. Subramanian

Frontline, Volume 22 – Issue 13, Jun 18 – Jul 01, 2005

THE ANCIENT ROMAN CONNECTIONS WITH TAMIL NADU – ALSO VAIGAI VALLEY CIVILIZATION, SANGAM ERA.

https://docs.google.com/document/d/1EnoLAy1bKEITHsrWkSBMsJZEQL9nx32drsNUZ_7r5Bk/edit


தேமொழி

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு